முகப்பு
தமிழ்நாடு

தம்மம்பட்டி அருகே பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் பிரசவம்

தம்மம்பட்டி அருகே, பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு, ஓடும் ஆம்புலன்சில் பிரசவம் நடைபெற்றது.

Updated On : 11 மார்ச், 2021 at 1:10 PM
பகிர்:


தம்மம்பட்டி அருகே, பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு, ஓடும் ஆம்புலன்சில் பிரசவம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள பச்சமலை ஊராட்சி கொடுங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை (35). இவரது மனைவி ஈஸ்வரி (31). நிறைமாத கர்ப்பிணியான, இவருக்கு, இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. 

மலைக்கிராமத்தில் இருந்து, மருத்துவமனைக்குச் செல்ல உரிய வாகன வசதி எதுவும் இல்லாததால், 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொடுங்கல் கிராமத்தின் அருகில், 30 கி.மீ. தூரத்தில் உள்ள, திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு, ஆம்புலன்சை அவசரமாக, அனுப்பி வைக்குமாறு, ஈஸ்வரியின் உறவினர்கள் கேட்டுள்ளனர்.  நீண்ட நேரம் ஆகியும், உப்பிலியாபுரத்தில் இருந்து, 108 ஆம்புலன்ஸ் வருவது குறித்த தகவல் அளிக்காமல், கால தாமதம் ஏற்பட்டது. 

Advertisement

அதையடுத்து, கொடுங்கல் கிராமத்துக்கு, 52 கி.மீ.தூரத்தில் இருக்கும் தம்மம்பட்டியில் இருந்து, உப்பிலியாபுரம் வழியாக, 108 ஆம்புலன்ஸ், 2 மணி நேரம் பயணித்து  கொடுங்கல் மலை கிராமத்தைச் சென்றடைந்தது. அவரை ஏற்றிக்கொண்டு, உப்பிலியாபுரம் வழியாக, தம்மம்பட்டிக்கு வரும் வழியில், ஈஸ்வரிக்கு கடுமையாக வயிற்று வலி ஏற்பட்டு துடிதுடித்துள்ளார். உடனடியாக, மலைச்சாலையில், ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு, மருத்துவ உதவியாளர் மணி (35), என்பவர், ஈஸ்வரிக்கு பிரசவம் பார்த்தார். 

அதில், ஈஸ்வரிக்கு சுகப் பிரசவமாக ஆண் குழந்தை பிறந்தது. இப்போது, தாயும், சேயும் நலமாக உள்ளனர். பச்சமலையின் அடிவாரத்தில் உள்ள, உப்பிலியாபுரத்தில் இருந்து, 108 ஆம்புலன்ஸ் சென்றிருந்தால், இதுபோன்ற சிக்கலான நிலை ஏற்பட்டு இருக்காது என, மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.