திமுகவின் 184 கனவு பலிக்குமா?
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளதைப்போல, திமுகவின் முந்தைய சாதனையை அக்கட்சியே முறியடிக்குமா அல்லது தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளதைப்போல ஸ்டாலின் எதிர்பார்ப்பு
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளதைப்போல, திமுகவின் முந்தைய சாதனையை அக்கட்சியே முறியடிக்குமா அல்லது தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளதைப்போல ஸ்டாலின் எதிர்பார்ப்பு பகல் கனவாக முடியுமா என்பதற்கு விடையளிக்கக் காத்திருக்கிறது 2021 தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்.
சந்தித்த முதல் தேர்தலிலேயே 15 இடங்களைப் பிடித்து பேரவைக்குள் நுழைந்தது திமுக. 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 124 இடங்களில் போட்டியிட்ட திமுக, 15 இடங்களைக் கைப்பற்றியது. அண்ணா, இரா. நெடுஞ்செழியன், மு. கருணாநிதி, க. அன்பழகன் உள்ளிட்டோர் முதன்முதலில் அப்போதுதான் சட்டப்பேரவையில் நுழைந்தனர். 2-ஆவது தேர்தலில் (1962) களம் கண்ட திமுக 142 இடங்களில் போட்டியிட்டு 50 இடங்களைக் கைப்பற்றியது. அந்தத் தேர்தலில் அண்ணா காஞ்சிபுரத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
மூன்றாவது தேர்தலில் (1967) ஆட்சியைக் கைப்பற்றியது. 174 இடங்களில் போட்டியிட்ட திமுக 137 இடங்களைக் கைப்பற்றி, காங்கிரûஸ அரியணையில் இருந்து இறக்கியது.
இதன் பிறகு தமிழகத்தில் இன்றுவரை காங்கிரஸால் ஆட்சிக்கு வர முடியவில்லை. காமராஜரே தோற்கடிக்கப்பட்டார்.
பேரவைத் தேர்தலில் தோற்ற அண்ணா, திமுக சட்டப் பேரவைக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானார். மேலவை உறுப்பினராகி முதல்வராகத் தொடர்ந்தார்.
இதேபோல, 4-ஆவதாக திமுக சந்தித்த தேர்தல்தான் (1971) அக் கட்சியின் வரலாற்றுச் சாதனையாக நீடிக்கிறது. 1952 தொடங்கி 2016 வரை திமுக இதுவரை சந்தித்த 14 பேரவைத் தேர்தல்களில் 1971-ஆம் ஆண்டுதான் அதிகபட்சமாக 184 இடங்களைக் கைப்பற்றியது. காமராஜரையும், ஸ்தாபன காங்கிரûஸயும் வீழ்த்த வேண்டும் என்பதால், பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைத்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல் அத்தனை தொகுதிகளையும் திமுகவுக்கே விட்டுக் கொடுத்தது. மிக அதிகமான இடங்களில் போட்டியிட்டு, மிக அதிகமான இடங்களில் வெற்றியும் பெற்றது திமுக.
தமிழகத்தில் இதுவரை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த எந்தக் கட்சியும் 184 இடங்களைப் பெற்றதில்லை. 2016-இல் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வரலாற்றுச் சாதனை படைத்த அதிமுககூட, அத் தேர்தலில் 135 இடங்களைக் கைப்பற்றித்தான் ஆட்சியமைத்தது.
ராஜீவ் காந்தி மரணத்துக்குப் பிறகு திமுகவுக்கு எதிராக தமிழகத்தில் பெரும் அலை அடித்த 1991 தேர்தலில் அதிமுக 164 (போட்டி 168), காங்கிரஸ் 60 (போட்டி 65) என இரு கட்சிகளும் சேர்ந்துதான் 224 இடங்களைக் கைப்பற்றின.
ஆக, பேரவைத் தேர்தல் வெற்றி வரலாற்றில் 1971-இல் திமுக 184 இடங்களில் வென்றது மட்டுமே இதுவரை சாதனையாக உள்ளது.
அண்ணாவின் மரணத்துக்குப் பிறகு மு. கருணாநிதியை, மீண்டும் முதல்வர் பதவியில் அமர வைத்ததும் அந்தத் தேர்தல்தான். அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வர் பொறுப்பை ஏற்றிருந்த மு. கருணாநிதி, இந்திரா காந்தியுடன் கொண்ட கூட்டணி உறவால், தமிழக சட்டப் பேரவையைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்கத் தயாரானார். இதன்படி, பேரவை கலைக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கும், தமிழக சட்டப் பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது.
தேசிய அளவில் காணப்பட்ட இந்திரா காந்தி ஆதரவு அலையில் 201 தொகுதிகளில் போட்டியிட்ட ஸ்தாபன காங்கிரஸ் 15 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இந்திரா காங்கிரஸýடனான கூட்டணியால் 203 இடங்களில் போட்டியிட்ட திமுக 184 இடங்களைக் கைப்பற்றியது.
இதன் தொடர்ச்சியாக, 1977-இல் 48 இடங்கள் (230), 1980-இல் 37 இடங்கள் (112), 1984-இல் 24 இடங்கள் (167), நான்கு முனை போட்டி இருந்த 1989-இல் 150 இடங்கள் (202), 1991-இல் 2 இடங்கள் (176), 1996-இல் 173 இடங்கள் (182) , 2001-இல் 31 இடங்கள் (183), 2006-இல் 96 இடங்கள் (132), 2011-இல் 23 இடங்கள் (124), 2016-இல் 88 இடங்கள் (180) என்ற வகையில் தனது வெற்றியைப் பதிவு செய்தது திமுக.
இதுவரை, தான் சந்தித்த 14 பேரவைத் தேர்தல்களில் 1971-இல் பெற்ற வெற்றி மட்டுமே திமுகவின் சாதனையாக உள்ளது. 1996-இல் அதிமுகவுக்கு எதிராக தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு அலை இருந்தபோதும் 182 இடங்களில் போட்டியிட்ட திமுகவுக்கு 173 இடங்களில் மட்டுமே வெற்றி சாத்தியமானது.
இதேபோல, 2006-ஆம் ஆண்டு தேர்தலிலும் குறைந்தபட்சமாக 96 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியமைத்தது. இறுதிவரை மைனாரிட்டி அரசு என்ற விமர்சனத்தை எதிர்கொண்டே 5 ஆண்டுகளையும் நிறைவு செய்தது.
தற்போது, (2021) 173 இடங்களில் தனித்துக் களம் காண்கிறது திமுக. கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 15 இடங்களில் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் மொத்தமாக 188 இடங்களில் உதயசூரியன் களம் காணும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தத் தேர்தலில் திமுக சாதனையை மீண்டும் திமுகவே முறியடிக்கவுள்ளது என்கிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். இதுதொடர்பாக, அவர் கூறுகையில், வரும் தேர்தலில் திமுக சாதனையை திமுகவே முறியடிக்கும் வகையில் 188 வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அனைவரும் வெற்றி பெறுவர். இதில் எந்தச் சந்தேகமும் கிடையாது என்கிறார்.
188 இடங்களில் போட்டியிட்டு 184 இடங்களில் திமுக வெற்றி பெறும் என்று மு.க. ஸ்டாலின் எதிர்பார்க்கிறார். தமிழக தேர்தல் களத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக குறிப்பிடும்படியான எதிர்ப்பு அலையோ, எதிர்க் கட்சிக்கான ஆதரவு அலையோ இல்லாத சூழலில், மு.க. ஸ்டாலினின் கனவு பலிக்குமா? இல்லை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுவதைப்போல, அது பகல் கனவாக முடியுமா என்பதை வாக்காளர்கள்தான் முடிவு செய்வார்கள்.
Advertisement