அருப்புக்கோட்டை அருகே ஆம்னி பேருந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 16 பேர் படுகாயம்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே மதுரை-தூத்துக்குடி பிரதான சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே மதுரை-தூத்துக்குடி பிரதான சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் உயிரிழந்தார். குழந்தைகள் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் இருந்து படுக்கை வசதிகளுடன் கூடிய தனியார் ஆம்னி பேருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, அருப்புக்கோட்டை அருகே வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பந்தல்குடி புறவழிச்சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி மதுரை-தூத்துக்குடி பிரதான சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் பேருந்தின் அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்பட 16 பேர் படுகாயமடைந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் பயணிகள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட விபத்தினால் இடிபாடுகளில் சிக்கி வெளியே செல்ல வழியின்றி பயணிகள் பேருந்தின் உள்ளே அலறி துடித்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் உதவியுடன் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், 6 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் உயிரிழந்த பெண் பயணியின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Advertisement
விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்தை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் விபத்து குறித்து நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஆம்னி பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.