தஞ்சை தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் நியமனம் செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பாலசுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டது செல்லாது எனத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பாலசுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டது செல்லாது எனத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள, பாலசுப்ரமணியன் துணைவேந்தருக்குரிய கல்வித் தகுதியைப் பெற்றிருக்கவில்லை. பல்கலைக்கழக மானியக்குழு விதிகள் பின்பற்றப்படாமல் துணைவேந்தா் நியமனம் நடந்துள்ளது. எனவே தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலசுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனத் தஞ்சாவூரைச் சோ்ந்த பேராசிரியர் ரவீந்திரன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவைக் கடந்த ஆண்டு விசாரித்த தனி நீதிபதி, பாலசுப்ரமணியன் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் பாலசுப்ரமணியன் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலசுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டது செல்லாது எனத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.