தமிழ்நாடு

உங்கள் நிலம் உங்களிடம் இருக்க மீண்டும் அதிமுக ஆட்சி தொடர வேண்டும்: பழனிசாமி

DIN

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை பரப்புரை மேற்கொண்டார். 

அப்போது அவர் பேசியதாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசையும், அதிமுகவையும் விமர்சிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவரது பிரசாரக் கூட்டங்களில் பொது மக்களுக்கு தேவையான நல்ல  திட்டங்கள் எதையும் சொல்வதில்லை. அதுபோன்ற திட்டங்கள் எதையும் திமுக  ஆட்சியின்போது செய்ததும் இல்லை. என்னை(பழனிசாமி) போலி விவசாயி எனக் கொச்சைப்படுத்திப் பேசி வருகிறார். 

விவசாயி என்றால் மு.க.ஸ்டாலினுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. விவசாயிகளுக்குத் தொடர்ந்து துரோகம் செய்த கட்சி திமுக. எல்லோரையும் சிறுமைப்படுத்திப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ள ஸ்டாலினுக்கு விவசாயம் கடினமான பணி என்பது தெரியாது. அதனாலேயே ரவுடியையும், விவசாயியையும் தொடர்புப்படுத்திப் பேசி வருகிறார். மக்களை மதிக்கத்தெரியாத ஸ்டாலின், தகுதி இல்லாத தலைவராகவும் உள்ளார். 

காவல்துறை உயர் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசி வரும் திமுகவினர், ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் மக்களை எப்படி நடத்துவார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் நிலம் உங்களிடமே இருப்பதற்கு அதிமுக அரசு மீண்டும் தொடர வேண்டும். அராஜக கட்சியாக உள்ள திமுகவிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

காவிரி ஆற்றிலிருந்து வேடசந்தூர் தொகுதிக்கு ரூ.182 கோடி செலவில் தண்ணீர் கொண்டு வருவதற்கான திட்டத்திற்கு ஆய்வுப் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஏப்.1ஆம் தேதி முதல் அனைத்து பகுதிகளுக்கும் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே பயிர்க் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, 18 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓட்டுநர் உரிமம் பெற்று கொடுக்கப்படும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளை இலவசமாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளோம்.

வேடசந்தூர் பகுதியில் அதிகம் விளையும் தக்காளியைப் பதப்படுத்துவதற்கு ரூ.24 கோடி செலவில் உணவுப் பூங்கா, முருங்கைக்காய்ப் பதப்படுத்துவதற்கு ரூ.4 கோடி செலவில் பதப்படுத்தும் மையம், ரூ.3 கோடி செலவில் குஜிலம்பாறை வட்டாட்சியர் அலுவலகம் கட்டுமானப் பணி உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. வறட்சி மிகுந்த வேடசந்தூர் தொகுதியை வளமாக்க, பொதுமக்கள் மீண்டும் அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில்களில் குடமுழுக்கு

செரியலூா் கரம்பக்காடு மாரியம்மன் கோயிலில் பால்குட சிறப்பு வழிபாடு

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT