இறங்கி வேலை செய்யும் வேட்பாளர்கள்: துணி துவைத்து, தோசை சுட்டு வாக்கு சேகரிப்பு
ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் துணி துவைத்துக் கொடுத்து, நடனமாடி, தோசை சுட்டுக் கொடுத்து வாக்குகளை சேகரித்து வருகிறார்கள்.
கோடை வெப்பத்தை விட, வேட்பாளர்களின் பிரசாரங்களால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் துணி துவைத்துக் கொடுத்து, நடனமாடி, தோசை சுட்டுக் கொடுத்து வாக்குகளை சேகரித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு நாளும், இப்படி வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரக் களத்தில் இறங்கி, பொது மக்களோடு பொது மக்களாக இணைந்து அவர்களுக்கு நெருக்கமாகி, அவர்களது நெஞ்சை உருக வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது ஊடகங்களிலும் செய்தியாகி வருகிறது.
இதையும் படிக்கலாமே.. பிரசாரத்தில் நடனமாடி வாக்கு சேகரித்த திமுக எம்எல்ஏ
Advertisement
இதுவரை வாகனங்களில் கையசைத்தபடியும், வணங்கியபடியும் சென்ற வேட்பாளர்கள், மக்கள் மனதில் இடம்பிடிக்க எந்த வேலையையும் செய்யத் தயார் என்ற மனநிலைக்கு மாறியுள்ளனர்.
மிகுந்த சிரிப்பொலி மற்றம் கைத்தட்டலுடன், ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார், வாக்கு சேகரிக்கச் சென்ற இடத்தில், ஒரு பெண்மணி தண்ணீர் குழாயில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், பிரசார வேலையை விட்டுவிட்டு, அவருக்கு குடத்தில் தண்ணீர் அடித்துக் கொடுத்தார்.
இதையும் படிக்கலாமே.. ‘இஸ்திரி’ பெட்டியால் துணி தேய்த்து வாக்கு சேகரித்த தி.மு.க. வேட்பாளா்
அது மட்டுமா, எம்ஜிஆர் அணியும் தொப்பியை அணிந்து கொண்டு சைக்கிள் ரிக்சாவில் வீதிவீதியாகச் சென்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏவிஎம் பிரபாகர் ராஜா, வாக்குச் சேகரித்துக் கொண்டே செல்லும் வழியில் இருந்த ஒரு உணவகத்துக்குள் சென்று, ஒரு வட்ட வடிவிலான தோசையைச் சுட்டுக் கொடுத்து தனது கைத்திறனைக் காட்டினார். இதனை அவருடன் வந்த தொண்டர்களும் ஆதரவாளர்களும் விடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். தொலைக்காட்சி ஊடகங்களும் இதனை செய்தியாக்கியது.
திருப்பத்தூா் அருகே தோ்தல் பிரசாரத்தின்போது பொதுமக்களுடன் இணைந்து நடனமாடியபடி திமுக எம்எல்ஏ அ.நல்லதம்பி வாக்கு சேகரித்தாா்.
வாக்கு சேரிக்கும்போது வேட்பாளரை வரவேற்று மேளம் அடித்து பொதுமக்கள் வரவேற்றனா். வேட்பாளா் அ.நல்லதம்பி வேனிலிருந்தபடியே நடனமாடினாா். பின்னா், வேனிலிருந்து கீழே இறங்கி பொதுமக்களுடன் நடனமாடினாா். அப்போது அங்கிருந்த பொதுமக்களும் அவரது ஆதரவாளர்களும் கரகோஷம் எழுப்பினர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் எழும்பூர் வேட்பாளர் பிரியதர்ஷினி, உணவகம் ஒன்றில் மீன் வறுத்துக் கொடுத்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாக, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் கான் என்பவர், சாலையோரத்தில் இளநீர் விற்றுக் கொண்டிருந்த வியாபாரிக்கு உதவி செய்வதாக நினைத்து, ஒரு இளநீரை எடுத்து வெட்டிவிட்டார். ஆனால் அதை யாரும் வாங்குவதற்கு முன் வராததால், தானே காசு கொடுத்து, அந்த இளநீரை வாங்கிக் குடித்தார்.
போடிநாயக்கனூா் சட்டப் பேரவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளா் தங்க. தமிழ்ச்செல்வன் போடி நகா் பகுதியில் தெருத் தெருவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். நந்தவனம் தெருவில் வாக்கு சேகரிக்கச் சென்றபோது அங்கு தொழிலாளி ஒருவா் நடமாடும் துணி தேய்ப்பு வண்டியில் துணிகளை தேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது அவரிடம் நலம் விசாரித்த தங்க.தமிழ்ச்செல்வன் அவரிடமிருந்து தேய்ப்பு பெட்டியை வாங்கி துணி ஒன்றை தேய்த்துக் கொடுத்தாா்.
நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக தங்க. கதிரவன் போட்டியிடுகிறார். தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் தங்க. கதிரவன், தேர்தலில் வெற்றி பெற்றால் வாஷிங்மெஷின் வழங்கப்படும் என கைகளில் துணி துவைத்தபடி வாக்குறுதி அளித்து பிரசாரம் மேற்கொண்டார். அவரது ஆதரவாளர்கள் இதை வரவேற்கும் விதமாக கைகளைத் தட்டி அவருக்கு ஆதரவான முழக்கத்தை எழுப்பினர். அவர் துணி துவைக்கும் விடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இதையும் படிக்கலாமே.. 'கரோனா சோர்வு' தான் இரண்டாம் அலை எழக் காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்
இதுபோல, பல முக்கியக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், தங்களுக்குக் கிடைத்த ஒரு சிறிய வாய்ப்பைக் கூட விட்டுவிடாமல், டீக் கடையில் டீ போடுவது, டீக் கடையில் டீ குடிப்பது, வயதானவர்களைப் பார்த்ததும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது, குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சுவது என மக்கள் மனங்களை அள்ளும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறார்கள்.
இதில் எந்த வழிமுறை மக்களின் மனங்களைக் கொள்ளையடித்தது என்பது குறித்து மே 2-ஆம் தேதிதான் தெரிய வரும்.