தமிழ்நாடு

புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது? உயர்நீதிமன்றம் கேள்வி

DIN

சென்னை: புதுச்சேரியில் வாக்காளர்களின் செல்லிடப்பேசி எண்களைப் பெற்று பாஜகவினர் பிரசாரம் செய்வதாக கொடுக்கப்பட்டுள்ள புகார் மீதான விசாரணை  முடியும் வரை தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் ஆனந்த் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரிக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர் தொகுதி வாரியாக கட்செவி குழுக்களைத் தொடங்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். பொதுவாக வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே இருக்கும். அதில் செல்லிடப்பேசி எண்கள் இருக்காது. இந்த நிலையில் ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் செல்லிடப்பேசி எண்களை பெற்று கட்செவி குழுவைத் தொடங்கி பாஜகவினர் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். 

இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், மனுதாரர்  புகார் குறித்து சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வாக்களர்களுக்கு மொத்தமாக குறுஞ்செதி மூலம் பிரசாரம் செய்ய பாஜகவினர் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரவில்லை. அனுமதி பெறாமல் குறுஞ்செய்தி அனுப்பியது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என விளக்கம் கேட்டு பாஜகவுக்கு கடந்த மார்ச் 7-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. 

ஆனால் பாஜக தரப்பில் இதுவரை பதிலளிக்கவில்லை. மார்ச் 8ல் விண்ணப்பித்ததாக பாஜக தரப்பில் கூறுவது போல எந்த விண்ணப்பத்தையும் தேர்தல் ஆணையம் பெறவில்லை. 
இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரித்து வருகிறது. விசாரணை அறிக்கை அடிப்படையில் தேர்தல் சின்னங்கள் சட்டத்தின்படி தலைமை தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுப்பார். அதே நேரத்தில் முழுமையான விசாரணை நடத்தாமல் பாஜக மீது நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதுச்சேரி வாக்காளர்களின் செல்லிடப்பேசி எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது?  என விசாரிக்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்ட   நீதிபதிகள், பாஜகவினர் மீதான புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்க கூடாது? என கேள்வி எழுப்பினர். 

பின்னர் இந்த முறைகேடு குறித்து ஆதார் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.  விசாரணை நியாயமான முறையில் நடப்பதை உறுதி செய்து விரைவில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 31-ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT