முகப்பு
தமிழ்நாடு

தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தால் வெறிச்சோடியது திருப்பூர்

திருப்பூர் மாநகரில் தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தின் காரணமாக மாநகரில் உள்ள முக்கியச் சாலைகள் அனைத்தும் போக்குவரத்து இல்லாமல் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தால் வெறிச்சோடியது திருப்பூர்
பகிர்:

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தின் காரணமாக மாநகரில் உள்ள முக்கியச் சாலைகள் அனைத்தும் போக்குவரத்து இல்லாமல் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடியது.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10 முதல் மே 24 ஆம் தேதி வரையில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மே 14 ஆம் தேதி அரசு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

இதன்படி காய்கறி, மளிகை, பலசரக்குக் கடைகளும் ஞாயிற்றுக்கிழமை செயல்படத் தடை விதித்துள்ளது. மேலும், தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தின்போது இரு, நான்கு சாக்கர வாகனங்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருப்பூர் மாநகரில் தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டது. அதிலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள குமரன் சாலை, பெருமாள் கோயில் வீதி, அவிநாசி சாலை, பி.என்.சாலை உள்ளிட்ட மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டது.

அதேபோல, காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள், தேநீர் விடுதிகள், உணவகங்கள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் இரும்பு தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் வாகனச் சோதனையையும் தீவிரப்படுத்தியுள்ளனர். இதில், விதிகளை மீறி வெளியில் வரும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு காவல்துறையினர் அபராதம், வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில், மருந்தகங்கள், மருத்துவமனைகள், அம்மா உணவகம், பொது நிவாரணம் வழங்குவதற்கான நியாயவிலைக்கடைகள் காலை 8 முதல் 12 மணி வரையில் செயல்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.