முகப்பு
தமிழ்நாடு

இருசக்கர வாகனங்களில்  சுற்றிய பொதுமக்களை எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸார்

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இருசக்கர வாகனங்களில் சுற்றியவர்களை நிறுத்தி, கரோனா பரவலின் கடுமையான தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வாழப்பாடி போலீஸார்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
வாழப்பாடியில் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் சுகுமார்.
பகிர்:


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இருசக்கர வாகனங்களில் சுற்றியவர்களை நிறுத்தி, கரோனா பரவலின் கடுமையான தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வாழப்பாடி போலீஸார்,  விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில்,  கரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை பரவல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், தனியார் பள்ளி தாளாளர்கள், நகைக்கடை உரிமையாளர் உட்பட ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 

நூற்றுக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று அறிகுறிகளுடைய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இத்தருணத்தில் நோய் தாக்குதலின் கொடூரத்தை அறியாத சிலர் அத்தியாவசிய தேவைகளின்றி,  இருசக்கர வாகனங்களில் பயணித்து வருகின்றனர்.

புதன்கிழமை வாழப்பாடியில் இருசக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்களை, வாழப்பாடி காவல் ஆய்வாளர் சுகுமார் தலைமையிலான போலீஸார்  தடுத்து நிறுத்தினர்.

கரோனா பரவல் தாக்கம்,  ஏற்பட்டுவரும் உயிர்ப்பலிகள் மற்றும், சிகிச்சை பெறுவதற்கு பணமிருந்தும் படுக்கை வசதி இன்றி நோயாளிகள் அவதிப்பட்டு வருவது குறித்தும் காவல் ஆய்வாளர் சுகுமார்,  இருசக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அடுத்தடுத்த தினங்களில், அத்தியாவசியமின்றி இரு சக்கர வாகனங்களில் பயணித்தால், வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர்.

முகக் கவசங்களை முறையாக அணியவும், கைகளை சோப்பு போட்டு கழுவவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், திருமணங்கள், துக்க காரியங்களில் பங்கேற்பதை தவிர்க்கவும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.