தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசித் திட்டம் தொடக்கம்
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
திருப்பூர்: தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை திருப்பூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சியில் கரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஆலோசனை நடத்துகிறார். இதற்காக முதல்வர் மு.க,ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு புறப்பட்டு 9.15 மணி அளவில் சேலம் விமான நிலையம் வந்தடைந்தார்.
இதன் பிறகு சேலம் இரும்பு ஆலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பிறகு கார் மூலமாக திருப்பூரை அடுத்த நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவுக்கு வியாழக்கிழமை பிற்பகல் 12.05 மணி அளவில் வந்தடைந்தார். அங்கு அவரை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன்,மேற்கு மண்டல காவல் துறை தலைவர் அமல்ராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதன் பிறகு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இதன் பிறகு கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பான விவரங்களையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதன் பிறகு கார் மூலமாக புறப்பட்ட அவர் கோவை சென்றார்.
தமிழகத்தில் 2,124 முகாம்களில் கரோனா தடுப்பூசி: இந்தியா முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கடந்த மே 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இதனடிப்படையில் தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 3கோடியே 63 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். இந்தத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 2,124 முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழில்துறையினர் நிதியுதவி: திருப்பூர் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருப்பூரைச் சேர்ந்த தொழில் துறையினர் கரோனா நிவாரண நிதியை வழங்கினர். ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் ரூ.1 கோடிக்கான காசோலையையும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் ரூ.50 லட்சம் மற்றும் பல்வேறு தொழில் துறையினர் சார்பில் மொத்தமாக ரூ.2 கோடியே 70 லட்சம் காசோலையையும் முதல்வர் பெற்றுக் கொண்டார்.