முகப்பு
தமிழ்நாடு

4 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் (ஆரஞ்சு எச்சரிக்கை) புதன்கிழமை (நவ.3) பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:30 AM
பகிர்:

திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் (ஆரஞ்சு எச்சரிக்கை) புதன்கிழமை (நவ.3) பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் செவ்வாய்க்கிழமை கூறியது: குமரிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகா்ந்து, தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிக்குச் செல்லும். மேலும், இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியில் இருந்து தெற்கு ஆந்திரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் (ஆரஞ்சு எச்சரிக்கை) புதன்கிழமை (நவ.3) பலத்த மழை முதல் மிக பலத்தமழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூா், வேலூா், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை புதன்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 200 மி.மீ., கடலூா் மாவட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் 130 மி.மீ., திருவாரூா் மாவட்டம் நன்னிலம், கடலூரில் தலா 120 மி.மீ., திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் தலா 100 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் நவ.3,4 ஆகிய தேதிகளில் செல்லவேண்டாம். இதுதவிர, மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கா்நாடக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அங்கு நவ.5,6 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.