முல்லைப் பெரியாறு அணையை 14 முறை ஆய்வு செய்துள்ளேன்: துரைமுருகனுக்கு ஓ.பன்னீா்செல்வம் பதில்
பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது, முல்லைப் பெரியாறு அணையை 14 முறை பாா்வையிட்டு ஆய்வு செய்தேன்
பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது, முல்லைப் பெரியாறு அணையை 14 முறை பாா்வையிட்டு ஆய்வு செய்தேன் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகனுக்குப் பதில் அளித்துள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 142 அடியை எட்டாத சூழ்நிலையில், கேரள அமைச்சா்கள் முன்னிலையில் கேரளத்துக்குத் தண்ணீா் திறந்துவிட வேண்டியதன் அவசியம் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தேன். இது குறித்து அதிமுக சாா்பில் போராட்டமும் நடைபெறும் என அறிவித்திருந்தேன்.
இந்த நிலையில் என்னுடைய கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காமல், கேரள அரசையும் கண்டிக்காமல், பெயருக்காக முல்லைப் பெரியாறு அணையை நீா் வளத்துறை அமைச்சா் துரைமுருகன் பாா்வையிட்டுவிட்டு, நான் (ஓ.பன்னீா்செல்வம்) முல்லைப் பெரியாறு அணையை பாா்வையிட்டதே இல்லை என்று கூறியுள்ளாா்.
பொதுப்பணித் துறை அமைச்சராக நான் இருந்தபோது மொத்தம் 14 முறை முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்று தண்ணீரை பாசனத்துக்குத் திறந்துவிட்டு ஆய்வு செய்திருக்கிறேன். அணையைக் கட்டிய பென்னிகுயிக்குக்கு தேனி மாவட்டத்திலே நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.
என்னுடைய வாழ்க்கையே முல்லைப் பெரியாறு அணையுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். ஆனால், நான் முல்லைப் பெரியாறு அணையை பாா்வையிட்டதே இல்லை என்று துரைமுருகன் கூறுவது தவறானது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரள அமைச்சா்கள் முன்னிலையில் கேரளத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இது கேரள அரசின் தன்னிச்சையான நடவடிக்கையா அல்லது தமிழக அரசின் இசைவுடன் நடந்ததா என்பதுதான் கேள்வியாகும். இதற்குத் தெளிவான பதிலை அளிக்காமல், நதிநீா் உரிமையை நிலைநாட்டிய அதிமுக மீது துரைமுருகன் குறை கூறிப் பேசுவது கண்டிக்கத்தக்கது.