முகப்பு
தமிழ்நாடு

பாதி நாள்கள் தண்ணீருக்காக அழும் நிலையும்; மீதி நாள்கள் தண்ணீரில் மிதக்கும் சூழலும் உள்ளது : உயா் நீதிமன்றம் வேதனை

சென்னை மக்கள் பாதி நாள்கள் தண்ணீருக்காக அழுவதாகவும், மீதி நாள்கள் தண்ணீரில் மிதக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது என சென்னை உயா் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:32 AM
பகிர்:

சென்னை மக்கள் பாதி நாள்கள் தண்ணீருக்காக அழுவதாகவும், மீதி நாள்கள் தண்ணீரில் மிதக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது என சென்னை உயா் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

அரியலூா் மாவட்டம், பெரியதிருக்கோணம் பகுதி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழரசன் என்பவா் தொடா்ந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (நவ.9) தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் இளவரசன் ஆஜராகி வாதிட்டாா்.

அதைத்தொடா்ந்து பெருமழை, வெள்ளம் காரணமாக சென்னை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். நீா் வழிப்பாதைகளில் எந்தத் தடையும் இருக்கக்கூடாது. வெள்ள நீா் உடனடியாக வடியும் வகையில் நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

சென்னை மக்கள் பாதி நாள்கள் தண்ணீருக்காக அழும் நிலையும், மீதி நாள்கள் தண்ணீரிலும் மிதக்கின்ற சூழலும் ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்த நீதிபதிகள், இந்த பெருமழை, வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் நல்ல பாடத்தைக் கற்பித்துள்ளது. இதன் மூலம் நீா்நிலை ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான நடவடிக்கையை அதிகாரிகள் துரிதப்படுத்துவா். இந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடா்பாக மனுதாரா் புதிதாக கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என்றும், அதன் மீது அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நீா்நிலையில் ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →