ரூ. 40-க்கு தக்காளி விற்கத் தயார்: உயர்நீதிமன்றத்தில் வியாபாரிகள் சங்கம் உறுதி
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள தக்காளி மைதானத்தை திறந்தால் ஒரு கிலோ தக்காளி ரூ. 40 முதல் 50 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்யத் தயார் என்று வியாபாரிகள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் உறுதி கூறியுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள தக்காளி மைதானத்தை திறந்தால் ஒரு கிலோ தக்காளி ரூ. 40 முதல் 50 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்யத் தயார் என்று வியாபாரிகள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் உறுதி கூறியுள்ளது.
கரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு தக்காளி மைதானத்தை திறக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
நீதிபதி சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் வியாபாரிகள் சங்கம் தரப்பில், 'வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளியை வைப்பதற்கு இடமில்லாமல் லாரியிலே இருப்பதால் தக்காளி அழுகிவிடுகிறது. எனவே, கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள தக்காளி மைதானத்தை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம்.
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள தக்காளி மைதானத்தை திறந்தால் ஒரு கிலோ தக்காளி ரூ. 40 முதல் 50 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்யத் தயாராக இருக்கிறோம். தக்காளி வரத்து இல்லாததால்தான் இப்போது தக்காளி விலை ஏற்றத்தில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் கோயம்பேடு தக்காளி மைதானத்தை திறந்தால் ஜெய்ப்பூர், உதய்பூர், நாக்பூர் மற்றும் ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்து தக்காளி வரும். இங்கு தக்காளி விலை குறையும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து வழக்கை நாளைய தினத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.