திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் விடாமல் பெய்து வரும் மழையால் ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகிறது. இதில் ஆவடி -199, சோழவரம் -148 மி.மீ, திருவள்ளூர் -126 மி.மீ அதிகமாகவும், ஆர்.கே.பேட்டை - 6 மி.மீ என மழை அளவு பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாள்களாக விடாமல் பெய்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தொடங்கி, சனிக்கிழமை காலை வரையில் அடைமழை விடாமல் பெய்து வருகிறது.
இதேபோல், சோழவரம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பூந்தமல்லி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்தது. இந்த மழையால் நகர் பகுதியில் தெருக்கள் மற்றும் சாலைகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
இதையும் படிக்க | தனியாா் வங்கி நிறுவனா்களுக்கு முதலீட்டு உச்சவரம்பு இல்லை
இதில், திருவள்ளூர் நகராட்சி பகுதியில் வி.எம்.நகர், கணபதி நகர், நேரு நகர் உள்ளிட்ட பகுதி தெரு மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதேபோல், சாலையில் குண்டும், குழியுமாக இருப்பதால் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் உள்ளது. இதனால் காலை 9 மணி வரையில் இருள் விலகாமல் இருந்ததால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்றன.
உபரி நீர் வெளியேற்றம்: இந்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் உள்ளது.
அதன் அடிப்படையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி நீர் இருப்பு மற்றும் உபரி நீர் வெளியேற்றம் வருமாறு: புழல் ஏரியில் 1,867 மில்லியன் கன அடி நீர் இருப்பும், 1,707 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
அதேபோல், சோழவரம் ஏரியில் 1,708 மில்லியன் கன அடி நீர் இருப்பும், 615 கன அடியும், பூண்டி ஏரியில் 2,387 மில்லியன் கன அடி நீர் இருப்பும், 4,253 கன அடியும், கண்ணன்கோட்டைதேர்வாய் கண்டிகை 500 மில்லியன் கன அடி நீர் இருப்பும், 108 கன அடியும் என உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
இதையும் படிக்க | தக்காளி விலை உயா்வு 2 மாதங்களுக்கு நீடிக்கும்: கிரிசில்
மழை அளவு: எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழையளவு மி.மீட்டரில் விவரம் வருமாறு :ஆவடி-199, சோழவரம்-148, திருவள்ளூர்-126, பொன்னேரி-118, ஜமீன்கொரட்டூர்-109, செங்குன்றம்-107, தாமரைபாக்கம்-98, பூண்டி-88, கும்மிடிப்பூண்டி-87, திருவாலங்காடு-84, பூந்தமல்லி-70, ஊத்துக்கோட்டை-60, திருத்தணி-44, பள்ளிப்பட்டு-22, ஆர்.கே.பேட்டை- 6 என மொத்தம் 1366 மி.மீட்டரும், சராசரியாக 91.06 மி.மீட்டராகவும் பதிவாகியுள்ளது.
இதில் ஆவடியில் அதிகமாகவும், ஆர்.கே.பேட்டையில் குறைந்தளவும் மழை பெய்துள்ளது.
நிரம்பிய ஏரிகள் விவரம்: இந்த தொடர் மழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை, ஆரணி மற்றும் கூவம் ஆற்று படுகைகளில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பியும் வருகின்றன.
அந்த வகையில் கொசஸ்தலையாறு உப நீர் வடி நிலப்பகுதிகளில் உள்ள கால்வாய்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கொசஸ்தலையாறு உபநீர் வடி நிலப்பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 336 ஏரிகளில் 280 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளது.
அதேபோல், ஆரணி ஆற்றின் நீர் வரத்தில் உள்ள 228 ஏரிகளில் 150 ஏரிகளும், ஊரக வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் உள்ள 200 ஏரிகள் நிரம்பியுள்ளது. அதேபோல், கிராமங்களிலும் உள்ள குளங்களும் நிரம்பி வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.