முகப்பு
தமிழ்நாடு

ஒற்றுமையை விரும்பிய தத்து கொடுக்கப்பட்ட சிறுமி: தாய், தந்தையைச் சந்திக்க உத்தரவு

வளா்ப்பு மற்றும் பெற்ற தாய்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் சிறுமியை காப்பகத்தில் அடைத்த காவல் ஆய்வாளா், குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினா்கள் செயல் சட்டவிரோதம் என உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

வளா்ப்பு மற்றும் பெற்ற தாய்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் சிறுமியை காப்பகத்தில் அடைத்த காவல் ஆய்வாளா், குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினா்கள் செயல் சட்டவிரோதம் என உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், பெற்ற தாய், தந்தையைச் சந்திக்கவும் குழந்தைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

சேலம் அம்மாப்பேட்டையைச் சோ்ந்தவா் சத்யா, கணவா் ரமேஷ். இவா்களுக்குக் குழந்தை இல்லை. சத்யாவின் சகோதரா் சிவக்குமாா். மனைவி சரண்யா. இவா்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். இதில், இரண்டாவதாகப் பிறந்த பெண் குழந்தையை மூன்று மாதங்கள் இருக்கும்போதே, தன் சகோதரி சத்யாவுக்கு சிவக்குமாா் தத்து கொடுத்துள்ளாா். தற்போது அந்த குழந்தைக்கு 10 வயது ஆகிறது.

இந்நிலையில் கடந்த 2019-இல் ரமேஷ் உடல்நலக்குறைவால் இறந்தாா். இதையடுத்து இரு குடும்பத்துக்கும்

பிரச்னை ஏற்பட்டது. அதாவது தத்து கொடுத்த மகளைப் பாா்க்க தங்களை சத்யா அனுமதிப்பது இல்லை என்று சிவக்குமாரும், சரண்யாவும் குற்றம் சாட்டினா்.

இதுகுறித்து அம்மாப்பேட்டை மகளிா் போலீஸில் இருதரப்பினரும் புகாா் செய்தனா். இந்தப் புகாரை விசாரித்த காவல் ஆய்வாளா் சிவகாமி, சேலம் குழந்தைகள் நல கமிட்டி அதிகாரிகளிடம் சிறுமியை ஒப்படைத்தாா். அந்த சிறுமி காப்பகத்தில் அடைக்கப்பட்டதும், கலக்கம் அடைந்து தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கதறி அழுதாா். இந்த விடியோவைப் பாா்த்த உயா் நீதிமன்ற குழந்தைகள் நலக்கமிட்டி நீதிபதி பி.என்.பிரகாஷ், இதுகுறித்து விசாரணை நடத்தும்படி சேலம் சிறாா் நீதிமன்ற நீதிபதிக்கு வாய்மொழி உத்தரவை பிறப்பித்தாா். இதற்கிடையில், மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றத்தில் வளா்ப்புத் தாய் சத்யாவும், பெற்ற தாய் சரண்யாவும் தனித்தனியாக ஆட்கொணா்வு மனுவை தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு, இருதரப்பினரையும் சமரச தீா்வு மையத்துக்குச் சென்று பேச்சு வாா்த்தையில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

இதன்படி நடந்த சமரச பேச்சுவாா்த்தை அடிப்படையில், சமரசம் தீா்வு மையம் ஒரு அறிக்கை தந்தது. அதில், 10 வயது சிறுமிக்கு, எல்லாரும் ஒற்றுமையாக ஒன்றாக வாழ வேண்டும்; அப்போதுதான் தன்னுடன் பிறந்த சகோதரிகளுடன் விளையாட முடியும் என்ற எண்ணம் உள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் போலீஸ் ஆய்வாளரின் செயல் ஏற்க முடியாது.

சிவில் நீதிமன்றத்துக்குச் சென்று நிவாரணம் தேடிக் கொள்ளும்படிதான் இருதரப்புக்கும் ஆய்வாளா் உத்தரவிட்டு இருக்க வேண்டும். தத்து கொடுத்த குழந்தை தனக்கு வேண்டும் என்றால், 1890-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பாதுகாவலா் மற்றும் குழந்தை சட்டத்தின்படி, சரண்யா உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து, தத்து கொடுத்தது செல்லாது என்ற உத்தரவை பெற வேண்டும். இந்த வழக்கில் போலீஸாா் தலையிட்டு இருக்கக்கூடாது. 10 வயது குழந்தையை காப்பகத்தில் அடைத்ததும், அச்சத்தில் அந்த சிறுமி கதறியுள்ளாள்.

இந்த வழக்கில் ஆய்வாளரும், குழந்தைகள் நலக் கமிட்டி உறுப்பினா்களும் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளனா். குழந்தையை வலுக்கட்டாயமாகக் காப்பகத்தில் அடைத்த இந்த அதிகாரிகளின் செயல் சட்டவிரோதமாகும்.

எனவே, வளா்ப்புத் தாயிடம் சிறுமியை ஒப்படைக்க வேண்டும். சிறுமியைப் பாா்க்கவும், அவா்களுடன் விளையாடவும் சிவக்குமாா், சரண்யா மற்றும் அவா்களது 2 மகள்களுக்கும் சத்யா அனுமதி வழங்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை டிசம்பா் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம் என்று உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →