தமிழ்நாடு

வீடுவீடாகச் சென்று பாடம் நடத்தும் பள்ளி ஆசிரியர்!

எம். ஞானவேல்

சீர்காழி: சீர்காழி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில், முயற்சியில் நடமாடும் மூன்று சக்கர சைக்கிளில் எல்இடி திரை அமைத்து பள்ளி மாணவர்களின் வீடு, வீடாகச் சென்று பாடங்களை நடத்தி வருகிறார்.

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சு.சீனிவாசன்(53). இவர் சீர்காழி அருகேயுள்ள  நிம்மேலி-நெப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த  2ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாமல் உள்ள நிலையில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்படுகிறது.

ஆனால் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு அரசின் கல்வித் தொலைகாட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டாலும் பல வீடுகளில் ஏழ்மையின் காரணமாக டிவிக்களுக்கு ரீசார்ஜ் செய்யாமலும், பெற்றோர்கள் விவசாயப் பணி போன்ற பணிகளுக்கு சென்றுவிடுவதாலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே ஆசிரியர் சீனிவாசன் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்படாத வகையில் கடந்த சில மாதங்களாக தனது சொந்த செலவில் நடமாடும் தள்ளுவண்டியின் மூலம் எல்இடி (32இன்ச்) டிவி மூலம் மாணவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று பாடங்களை நடத்தி வருகிறார். இதற்காக ஆசிரியர் சீனிவாசன் எல்இடி டீவி, ஸ்பீக்கர், இணையவசதி மோடம், பென்டிரைவ் ஆகியவற்றை தனது சொந்த செலவில் வாங்கி எல்இடி டீவியை மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் தள்ளுவீல்சேரில் பொருத்தி அதனுடன் ஸ்பீக்கர் ஆகியவற்றை அமைத்துள்ளார்.

இந்த நடமாடும் எல்இடி தள்ளுவண்டியை தான் பணியாற்றும் நடுநிலைப்பள்ளியில் பயிலும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் வீடுகளுக்குத் தேடிச் சென்று பாடங்கள் நடத்திவருகிறார்.

நிம்மேலி நடுத்தெரு, தெற்குத்தெரு, வடக்குத்தெரு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிக்குச் சென்று நடமாடும் தள்ளுவண்டி எல்இடி திரையை அங்கு அமைத்து அதற்கு மின்வசதி அருகில் உள்ள வீடுகள் மூலம் மின்வசதி பெற்று கல்வி தொலைகாட்சியை ஒளிபரப்பி பாடங்களை சுமார் 2 மணி நேரம் வரை நடத்தி வருகிறார். அந்தந்த பகுதியில் உள்ள மாணவர்களை வரவழைத்து சமூக இடைவெளியுடன் அமரவைத்து பாடங்களை நடத்துகிறார் ஆசிரியர் சீனிவாசன். இவ்வாறு ஒவ்வொரு பகுதியாக நாள்தோறும் சென்று ஒவ்வொரு பாடங்களை நடத்துகிறார்.

தனது வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இல்லாமல் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாடங்களை நடத்தி வீட்டுப்பாடங்களையும் தந்துவிட்டுச் செல்கிறார். பின்னர் மாணவர்களின் சந்தேகங்களையும் பூர்த்தி செய்து எளிமையாக புரியும் வகையில் பாடங்களை ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தி வருகிறார் ஆசிரியர் சீனிவாசன். அரசுப் பள்ளி ஆசிரியரின் இந்த முயற்சி பெரும்பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் சீனிவாசன் கூறுகையில், கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 2 ஆண்டுகளாக ஏழை,எளிய, கிராமப்புற மாணவர்களின் கல்விதான் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு தொலைக்காட்சி வாயிலாக கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கிராமங்களில் உள்ள ஏழ்மையான வீடுகளில் டிவிக்களுக்கு ரீசார்ஜ் செய்ய வசதி இல்லாமல் தொடர்ந்து மாணவர்கள் கல்வி கற்க முடியவில்லை.

இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் முயற்சி செய்ய வேண்டும் என சிந்தித்து, நடமாடும் தள்ளுவண்டியில் எல்இடி டீவி, ஸ்பீக்கர் அமைத்து அதனை மாணவர்களின் இல்லங்களுக்கு கொண்டு சென்று பாடங்களை நடத்தி வருகிறேன். கல்வித் தொலைக்காட்சியை இணையம் மூலம் பெற்று மாணவர்களுக்கு எளிதாக பள்ளிகள் இல்லாமலேயே பாடங்களை அவர்கள் வீட்டிலேயே நடத்த முடிவதால் மாணவர்களுக்கும் கல்வி பாதிக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. எனக்கும் மனநிறைவு கிடைக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT