முகப்பு
தமிழ்நாடு

கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்: 17 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்ட கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 17.14 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்ட கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 17.14 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5.85 கோடியை எட்டியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் முன்களப் பணியாளா்களுக்கும், முதியவா்களுக்கும் மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் வரை தமிழகத்தில் 58,54,130 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதிகரிக்கப்பட்டன.

மேலும் மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி 28.91 லட்சம் பேருக்கும், 19-ஆம் தேதி 16.43 லட்சம் பேருக்கும், 26-ஆம் தேதி 25.04 லட்சம் பேருக்கும், கடந்த 3-ஆம் தேதி 17.19 லட்சம் பேருக்கும், கடந்த 10-ஆம் தேதி 22.52 லட்சம் பேருக்கும், கடந்த 23-ஆம் தேதி 22.33 லட்சம் பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், ஏழாவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்காக தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 32 ஆயிரம் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டன.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் 30 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் பகிா்ந்தளிக்கப்பட்டன. மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, சனிக்கிழமை ஒரேநாளில் 17.14 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதில் 6.26 லட்சத்துக்கும் மேற்பட்டோா் முதல் தவணை தடுப்பூசியும், 10.87 லட்சத்துக்கும் அதிகமானோா் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனா். இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் அதிகபட்சமாக சென்னையில் 1,52,849 பேருக்கும், விழுப்புரத்தில் 1,05,694 பேருக்கும், கடலூரில் 98,619 பேருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →