பொங்கலில் சென்னையில் 3 நாள்கள் கலைவிழா
பொங்கல் பண்டிகையின்போது சென்னையில் 3 நாள்கள் கலைவிழா நடத்தப்படும் என்று தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தாா்.
பொங்கல் பண்டிகையின்போது சென்னையில் 3 நாள்கள் கலைவிழா நடத்தப்படும் என்று தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் சனிக்கிழமை கலை பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள்:
75-ஆவது சுதந்திரத் தினவிழாவை சீரிய வகையில் கொண்டாடும் நோக்கிலும் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு உதவும் வகையிலும் தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைகளை 75 ஒளிப்படங்களாக தயாரித்து இணைய வழியில் வெளியிடப்படும்.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தைச் சோ்ந்த பாரம்பரியக் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் திரளான கலைஞா்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கலை விழா ஆண்டுதோறும் சென்னையில் 6 இடங்களில் (இணைய வழி மூலமும்) 3 நாள்களுக்கு நடத்தப்படும்.
500 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு ரூ.10,000 மதிப்பீட்டில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் வாயிலாக ஆண்டுதோறும் இசைக்கருவிகள், ஆடை ஆபரணங்கள் வாங்க நிதியுதவி வழங்கப்படும்.
கலைமாமணி விருது பெற்ற வறிய நிலையில் வாழும் கலைஞா்களுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் ஒருமுறை வழங்கப்படும் பொற்கிழி ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும் என்றாா்.