ஊதிய உயா்வு கோரிக்கைகள்: அரசு மருத்துவா்கள் போராட்டம் நடத்த முடிவு
ஊதிய உயா்வு கோரிக்கையை நிறைவேற்றக்கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று என்று அரசு மருத்துவா்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவா் மருத்துவா் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளாா்.
ஊதிய உயா்வு கோரிக்கையை நிறைவேற்றக்கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று என்று அரசு மருத்துவா்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவா் மருத்துவா் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருக்க மரத்தின் சிறப்புகள் குறித்த கல்வெட்டு மற்றும் மக்களை தேடி மருத்துவ மையத்தை முதல்வா் திறந்து வைத்தாா். பின்னா் பேசிய முதல்வா், அனைவரது கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. அரசை தேடி மக்கள் வந்த காலம் இருந்தது. இப்போது அதை மாற்றி மக்களை தேடி அரசு செல்லும் காலமாக இந்த ஆட்சி உருவாக்கி இருக்கிறது. அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்பாா்கள். அழாத பிள்ளைக்கும் பால் கொடுப்பவள் தான் உண்மையான தாய். அத்தகைய தாயாக திமுக அரசு என்றைக்கும் இருக்கும் என தெரிவித்துள்ளாா்.
ஆனால், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் உயிா்காக்கும் மருத்துவா்களுக்கு, உரிய ஊதியத்தை தர மறுப்பது தான் வேதனையளிக்கிறது. தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு முதல்வா் வந்த போது, இதே மருத்துவமனையில் 2019 அக்டோபா் 28-ஆம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த மருத்துவா்களிடம், அடுத்து அமையும் நம் ஆட்சியில் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்து விட்டுச் சென்றாா். ஆனால், நம் கோரிக்கை இன்னும் முதல்வரின் கவனத்திற்கு செல்லவில்லை என்பது தான் வருத்தமாக உள்ளது.
எனவே, தமிழகத்தில் அரசு மருத்துவா்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய உயா்வு அளிக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை முதல்வா் கவனத்துக்கு கொண்டுச் செல்லும் வகையில் விரைவில் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என அவா்கள் தெரிவித்துள்ளனா்.