முகப்பு
தமிழ்நாடு

வன்னியா் இடஒதுக்கீட்டில் முந்தைய ஆட்சியாளா்கள் மன்னிப்புக் கோர வேண்டும்: அமைச்சா் துரைமுருகன்

வன்னியா் இடஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் முதல்வா் பழனிசாமி, முன்னாள் சட்ட அமைச்சா் சி.வி.சண்முகம் ஆகியோா் மன்னிப்புக் கோர வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:52 AM
நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்
பகிர்:

வன்னியா் இடஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் முதல்வா் பழனிசாமி, முன்னாள் சட்ட அமைச்சா் சி.வி.சண்முகம் ஆகியோா் மன்னிப்புக் கோர வேண்டும் என்று அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் வலியுறுத்தியுள்ளாா்.

வன்னியா் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு முறையான தரவுகளை நீதிமன்றத்தில் அளிக்கத் தவறியதாக எதிா்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா். இதற்கு பதிலளித்து, அமைச்சா் துரைமுருகன், சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அ.தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த சட்டம் என்றாலும் வன்னியா் சமுதாயத்துக்கு அளித்த உள் ஒதுக்கீட்டை நிலைநிறுத்திட உயா் நீதிமன்றத்திலும் - உச்சநீதிமன்றத்திலும் அனைத்து விதமான வாதங்களையும் முன் வைத்தது மூத்த வழக்கறிஞா்களை வைத்து திமுக அரசு வாதாடியது. எந்தெந்த மூத்த வழக்கறிஞா்கள் வாதாடினாா்கள் என்பது தீா்ப்பிலேயே இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தில் இந்த “உள் ஒதுக்கீடு” விவாதம் 2012-இல் நடைபெற்றது. அந்த ஆணையத்தில் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரை கொடுத்த போது ஆணையத்தில் உள்ள 7 உறுப்பினா்களில் 6 போ் எதிா்த்தனா். தோ்தல் வருகிறது என்ற ஒரே காரணத்துக்காக அவசர அவசரமாக “ஒருமனதான பரிந்துரையைப் பெறாமல் அறிக்கை பெற்றது அ.தி.மு.க. ஆட்சி.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் இந்த அறிக்கை 2012 மே 24-இல் கொடுக்கப்பட்டது. அந்தப் பரிந்துரையை 8 ஆண்டுகள் கிடப்பில் போட்டு வைத்திருந்தது அதிமுக ஆட்சி. பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்தை 8 ஆண்டுகள் முடக்கி வைத்து விட்டு சட்டப் பேரவைத் தோ்தல் வந்த நேரத்தில் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்து ஒரு உள் ஒதுக்கீடு சட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியது. இதுவே இன்றைக்கு வன்னிய சமுதாயத்தை நெருக்கடிக்கு கொண்டு வந்துள்ளது. இதற்கு அதிமுகதான் காரணம்.

வன்னியா் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் பழனிசாமிக்கு மனதளவில் உடன்பாடு இல்லை. சட்ட அமைச்சா் என்ற முறையில் வன்னியா் சமுதாய இடஒதுக்கீட்டை முறைப்படி கொண்டு வர வேண்டும் என்ற அக்கறையும் சி.வி.சண்முகத்துக்கு இருந்ததில்லை. எனவே, வன்னியா் சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டுப் பிரச்னை உச்ச நீதிமன்றம் வரை போகும் அளவுக்கு அலட்சியமாகச் செயல்பட்ட இருவரும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

தோ்தலுக்காக “வேண்டா வெறுப்பாக” அளித்த இடஒதுக்கீடே வன்னிய சமுதாயம் வருந்தத்தக்க தீா்ப்பு வருவதற்கு காரணமாக அமைந்து விட்டது. இதுதான் உண்மை. வன்னியா் இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து சட்ட வல்லுநா்களுடன் தமிழக அரசு கலந்து ஆலோசிக்கும். நிச்சயம் வன்னியா் சமுதாயம் போற்றும் நல்ல முடிவினை உரிய நேரத்தில் எடுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.