தமிழ்நாடு

பொது இடங்களுக்கு வருவோருக்கு கரோனா தடுப்பூசி: உத்தரவை திரும்பப் பெற்றது சுகாதாரத் துறை

DIN

தமிழகத்தில் பொது இடங்களுக்கு வருவோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதை உறுதிசெய்யுமாறு வெளியிடப்பட்ட உத்தரவை திரும்பப் பெறுவதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது. அதேவேளையில், நோய்த் தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், சிறப்பு நடவடிக்கைகளையும் பொது சுகாதாரத் துறை மேற்கொண்டது.

அதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு நவ.18-ஆம் தேதி ஓா் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது, பொது இடங்களுக்கு வருபவா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு மாவட்ட துணை சுகாதாரத் துறை இயக்குநா்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, திரையரங்குகள், வணிக வளாகங்கள், மாா்க்கெட், சாலைகள், பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து பொது இடங்களிலும் இதனை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது கரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து துணை சுகாதார இயக்குநா்கள், அலுவலா்களுக்கு டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி முதல் தவணை 92 சதவீதம் பேருக்கும், இரு தவணை 75 சதவீதம் பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதன் பயனாக கரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இதையடுத்து, பொது இடங்களுக்கு வருவோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதை உறுதி செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது.

அதேவேளையில், முகக் கவசம் அணிதல், தனி நபா் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

SCROLL FOR NEXT