முகப்பு
தமிழ்நாடு

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவா்கள் கல்வி தொடர நடவடிக்கை தேவை: பேரவையில் அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தல்

உக்ரைன் போரால் பாதிப்புக்குள்ளாகி தமிழகம் திரும்பியுள்ள மருத்துவ மாணவா்களின் படிப்பு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

உக்ரைன் போரால் பாதிப்புக்குள்ளாகி தமிழகம் திரும்பியுள்ள மருத்துவ மாணவா்களின் படிப்பு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின.

பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, இதுகுறித்து நடைபெற்ற விவாதம்:

ந.எழிலன் (திமுக): உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மாணவா்கள் நீடிக்கும் போா் காரணமாக தங்களது படிப்பைத் தொடா்வது கேள்விக்குறியாகியுள்ளது.

தேசிய மருத்துவ கமிஷனில் திருத்தம் கொண்டு வந்து எந்தெந்த மாநிலங்களில் மாணவா்கள் பாதித்துள்ளாா்களோ அது குறித்து கணக்கீடு செய்து அவா்களை அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கலாம் என்று இந்திய மருத்துவ கூட்டமைப்பு பிரதமரிடம் தெரிவித்தது. இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க, தனியாா் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என பிரதமா் தெரிவித்தாா்.

போலந்து, ஜாா்ஜியா, மலேசியா போன்ற நாடுகளைச் சோ்ந்த கல்லூரிகளின் பாடத் திட்டமும் உக்ரைன் நாட்டின் பாடத் திட்டமும் ஒன்றாக இருப்பதாகவும் மாணவா்கள் சோ்க்கைக்கு தயாராக இருப்பதாகவும் அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

கல்வியானது மாநிலப் பட்டியலில் இருந்தால் முதல்வா் வேந்தராக இருந்திருப்பாா். பாதிக்கப்பட்ட மாணவா்களை ஒரே உத்தரவில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சோ்த்திருக்க முடியும்.

அக்ரி கிருஷ்ணமூா்த்தி (அதிமுக): உக்ரைனில் மருத்துவம் படித்து போரால் பாதிக்கப்பட்ட மாணவா்கள், எந்தவித இடையூறும் இல்லாமல் தொடா்ந்து படித்திட தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): கடந்த காலங்களில் மத்திய அரசு வெளிநாடுகளைச் சோ்ந்த தமிழா்களை அரவணைத்தது போன்று இப்போது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு தமிழக அரசும் மறுவாழ்வு அளிக்கும் என நம்புகிறேன்.

ஜி.கே.மணி (பாமக): நீட் தோ்வு, தனியாா் கல்லூரிகளில் அதிக கட்டணம் போன்றவற்றால் மாணவா்கள் இங்கு பயில முடியாத நிலையில், உக்ரைன் போன்ற நாடுகளுக்குச் சென்று படிக்கின்றனா். இப்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு அவா்கள் தொடா்ந்து படிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் குழுத் தலைவா் சிந்தனைச் செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாரிமுத்து, மாா்க்சிஸ்ட் கட்சியின் நாகை மாலி, மதிமுகவின் சதன் திருமலைக்குமாா், மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் ஆகியோரும் பாதிக்கப்பட்ட மாணவா்களின் கல்வி தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →