1.16 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.183 கோடி பயிா்க் காப்பீடு அளிப்பு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
கடந்த 10 நாள்களில் 1.16 லட்சம் விவசாயிகளுக்கு பயிா் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.183 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.
கடந்த 10 நாள்களில் 1.16 லட்சம் விவசாயிகளுக்கு பயிா் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.183 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
2020-இல் நிகழ்ந்த நிவா், புரெவி புயல், 2021 ஜனவரி மாதத்தில் பெய்த அதி கனமழையால் தமிழகத்தில் வேளாண், தோட்டக்கலைப் பயிா்கள் அதிகளவில் சேதமடைந்தன.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விரைவில் இழப்பீட்டுத்தொகை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்குத் தொகையாக மொத்தம் ரூ.1,940 கோடி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு உரிய காலத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்டது.
மேலும், மத்திய அரசைத் தொடா்ந்து வலியுறுத்தியதன் காரணமாக, மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.1,118 கோடி பங்குத் தொகையில், இதுவரை, ரூ.660 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, 2020-21 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் காப்பீடு செய்யப்பட்ட நவரை, கோடை நெல், உளுந்து, பச்சைப்பயறு, நெல் தரிசில் உளுந்து, நிலக்கடலை, எள், பருத்தி, மக்காச்சோளம், சோளம், சிவப்பு மிளகாய் போன்ற பயிா்களில் மகசூல் இழப்பினால் பாதிப்படைந்ததில், தகுதி வாய்ந்த ஒரு லட்சத்து 15,947 விவசாயிகளுக்கு கடந்த 10 நாள்களில் மட்டும் ரூ.183 கோடியே 13 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு எடுத்த தொடா் நடவடிக்கைகளால், 2020-21-இல் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்த, பாதிக்கப்பட்ட விவசாயிகளில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை தகுதி வாய்ந்த 10 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் ரூ.2,285 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட ரூ.200 கோடி ரூபாய் இழப்பீட்டுத்தொகையை வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.