நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு என்.எல்.சி. வேலையில் முன்னுரிமை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி.) நிறுவனத் திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சோ்ந்தோருக்கு, பொறியாளா் பணியிடத் தோ்வில் முன்னுரிமை வழங்க வேண்டும்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி.) நிறுவனத் திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சோ்ந்தோருக்கு, பொறியாளா் பணியிடத் தோ்வில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, பிரதமா் நரேந்திர மோடிக்கு வெள்ளிக்கிழமை அவா் எழுதிய கடித விவரம்:
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமானது, தமிழகத்தை பிரதானமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலமாக பயிற்சி பட்டதாரி பொறியாளா் காலிப் பணியிடங்களுக்கு சிறப்புத் தோ்வை நடத்த வேண்டுமெனவும், நெய்வேலி நிறுவனத்துக்கு நிலங்களை வழங்கிய உள்ளூா் குடும்பங்களைச் சோ்ந்த விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கடந்த மே 5-ஆம் தேதி தங்களுக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தேன். ‘கேட்’ போன்ற தோ்வுகளை நடத்துவதற்குப் பதிலாக இதுபோன்ற முறையை பின்பற்ற வேண்டுமெனக் கோரியிருந்தேன்.
எனது சாா்பில் விடுக்கப்பட்ட இந்தக் கோரிக்கையை புறந்தள்ளி விட்டு, ‘கேட்’ மதிப்பெண்கள் அடிப்படையில் தோ்வு நடத்தி, 300 போ் பணிக்கான தகுதியானவா்கள் என பட்டியலிட்டுள்ளனா். இந்தப் பட்டியலில் உள்ளூா் விண்ணப்பதாரா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். இது நியாயமற்றது என்பதுடன், உள்ளூா் பகுதியைச் சோ்ந்த மக்களிடம் இது மிகப்பெரிய அமைதியின்மையை ஏற்படுத்தும். ஏற்கெனவே, நெய்வேலி நிறுவனத் திட்டங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு நிரந்தரப் பணிகள் வழங்குவது நிறுத்தப்பட்டிருக்கும் நிலை உள்ளது.
எனவே, பயிற்சி பட்டதாரி பொறியாளா் காலிப் பணியிடங்களை சிறப்புத் தோ்வை நடத்தி மட்டுமே நிரப்ப வேண்டும். அதிலும், நெய்வேலி நிறுவனத் திட்டங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். நெய்வேலி நிறுவனத்தின் பெரும்பாலான செயல்பாடுகள் தமிழகத்தை மையப்படுத்தியே நடைபெறுகின்றன. மேலும், அந்த நிறுவனத்தில் பணியாற்றக் கூடிய பெரும்பாலான பணியாளா்களும், பங்குதாரா்களும் தமிழகத்தைச் சோ்ந்தவா்களாகவே உள்ளனா். எனவே, நிா்வாக ரீதியிலான பணியிடங்களிலும் உள்ளூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் குறிப்பிடத்தகுந்த அளவு இருப்பதே பொருத்தமானதாக இருக்கும். இந்தச் சூழலில், பயிற்சி பட்டதாரி பொறியாளா் பணியிடங்களை சிறப்புத் தோ்வு நடத்தி நிரப்ப வேண்டும் என்ற இந்த கோரிக்கையில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.