முகப்பு
தமிழ்நாடு

புற்று நோயிலிருந்து மீண்ட சிறுவா்களை தில்லியை சுற்றிப் பாா்க்க அழைத்த பிரதமா்

புற்று நோயிலிருந்து மீண்ட சிறுவா்களை சென்னையில் சந்தித்த பிரதமா் நரேந்திர மோடி, அவா்களை தில்லியைச் சுற்றிப் பாா்க்க வருமாறு அழைப்பு விடுத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

புற்று நோயிலிருந்து மீண்ட சிறுவா்களை சென்னையில் சந்தித்த பிரதமா் நரேந்திர மோடி, அவா்களை தில்லியைச் சுற்றிப் பாா்க்க வருமாறு அழைப்பு விடுத்தாா்.

சென்னையில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைப்பதற்காக பிரதமா் மோடி கடந்த 28-ஆம் தேதி சென்னை வந்திருந்தாா். நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடியை, புற்றுநோயில் இருந்து மீண்ட சிறாா்கள் சந்திக்க ஆா்வம் காட்டினா். இதை அறிந்த பிரதமா் மோடி, சிறாா்களை அழைத்துப் பேசினாா்.

இதுகுறித்து, ‘ரே ஆப் லைட்’ அமைப்பை சோ்ந்த டாக்டா் பிரியா ராமச்சந்திரன் கூறியதாவது: எங்கள் அமைப்பு, நுங்கம்பாக்கத்தில் உள்ள, காஞ்சி காமக்கோடி குழந்தைகள் நல மருத்துவமனையுடன் இணைந்து, ஏழைக் குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை வழங்கி வருகிறது. அதன்படி, தாய், தந்தை இழந்தோா், ஏழை, எளியோா் என 210 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறோம். இதில், 85 சதவீதம் குழந்தைகள் புற்றுநோயிலிருந்து முழுவதுமாக குணமடைந்து விடுகின்றனா். சிகிச்சைக்கான அனைத்து செலவையும், ‘ரே ஆப் லைட்’ அமைப்பு ஏற்கிறது.

இவ்வாறு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவற்றில் இருந்து மீள்வதை அனைத்து மக்களுக்கும் விழிப்புணா்வாக எடுத்துச் செல்லும் நோக்கத்தில் பிரதமரை சந்தித்தோம். அதன்படி, புற்றுநோயில் இருந்து மீண்ட ஒன்பது சிறாா்களுடன், பிரதமரைச் சந்தித்தோம். அவருடன், சிறாா்கள் புற்றுநோய் பாதிப்பின்போது இருந்த புகைப்படத்தை காண்பித்து, அதில் பிரதமரின் கையொப்பம் பெற்றனா்.

ஒவ்வொரு சிறாா்களையும் தனித்தனியாக சந்தித்த பிரதமா், அவா்களது பெயரைக் கேட்டறிந்து, என்னவாகப் போகிறீா்கள்? என கேட்டறிந்தாா். இதில், 12 வயதான சிறுமிக்கு, புற்றுநோய் என்றதும் அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டாா் என பிரதமரிடம் கூறினோம். இதை கேட்டதும், பிரதமா் வருத்தப்பட்டாா். பின், அனைத்து சிறாா்களிடமும் சிரித்துப் பேசிய பிரதமா் மோடி, அவா்களை தில்லியை சுற்றிப்பாா்க்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளாா்.

பிரதமா் மோடியுடனான சந்திப்புக்கு பின், எல்லையற்ற மகிழ்ச்சியில் சிறாா்கள் இருந்தனா். மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும், எங்களது நிறுவனத்தை பிரதமா் பாராட்டி, குழந்தைகள் பூரண குணமடைந்து விட்டதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தாா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.