முகப்பு
தமிழ்நாடு

வீடுகளில் சிறு நூலகமாவது அமைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

அனைவரும் தங்கள் வீட்டில் சிறு நூலகமாவது அமைத்திருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

அனைவரும் தங்கள் வீட்டில் சிறு நூலகமாவது அமைத்திருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடு, சிக்கய்யநாயக்கர் கல்லூரி மைதானத்தில் புத்தகத் திருவிழாவை முதல்வர் ஸ்டாலின் முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து ஆற்றிய உரை, புத்தக வெளியீட்டு விழாக்களில் கலந்துகொள்வதும், புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பதும் மகிழ்ச்சிக்குரியது. ஏனென்றால் இவை அறிவுத்திருவிழா! தமிழ்த் திருவிழா! தமிழாட்சி - தமிழர்களின் ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது தமிழ்நாட்டில். இத்தகைய தமிழாட்சி நடக்கும் நாட்டில் தமிழ்த் திருவிழாக்களும் அதிகம் நடந்தாக வேண்டும். 

சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றேன். சென்னையைத் தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் தான் இதுபோன்ற கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியோடு இத்தகைய புத்தகக் கண்காட்சி நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். அதற்காக இந்த ஆண்டு, 4 கோடியே 96 இலட்சம் ரூபாய் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

புத்தகம் வழங்குவது இன்றைக்கு ஒரு இயக்கமாகவே தமிழ்நாட்டில் மாறி இருக்கிறது. இந்த இயக்கம் விரிவடைய வேண்டும், வலுவடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அறியாமை எனும் இருட்டில் தத்தளிப்பவர்களுக்கு ஒளி கொடுக்கும் அறிவுச்சுடர்தான் புத்தகங்கள்! பொய்யும் புரட்டும் கலந்த பழமைவாதம் எனும் கடலில் சிக்கித் தவிக்காமல், நாம் கரை சேர உதவுகிற பகுத்தறிவுக் கப்பல்கள்தான் புத்தகங்கள்! வீட்டுக்கு ஒரு நூலகம் அமைய வேண்டும் என்று அண்ணா விரும்பினார். அப்படி அனைவரும் தங்கள் வீட்டில் சிறு நூலகமாவது அமைத்திருக்க வேண்டும். 

தமிழ்நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக்கொள்ளும் பண்பாடு வளர வேண்டும்! வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அறிவார்ந்த நூல்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்! சிந்தனையில் தெளிவு ஏற்படும் புத்தகங்களை வாசிக்கத் தூண்டுங்கள்! இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →