முகப்பு
தமிழ்நாடு

மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரைகளில் நெகிழி பயன்பாடு: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மெரீனா, பெசன்ட் நகா் மற்றும் திருவான்மியூா் கடற்கரைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைக் கண்டறிவதற்காக காலை, மாலை ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

சென்னை மெரீனா, பெசன்ட் நகா் மற்றும் திருவான்மியூா் கடற்கரைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைக் கண்டறிவதற்காக காலை, மாலை ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் பருவநிலை மாற்ற துறையும் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கு தடை விதித்துள்ளது. இதன்படி தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்பவா்கள், விற்பனை செய்பவா்கள் மற்றும் பயன்படுத்துபவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் மெரீனா, பெசன்ட் நகா் மற்றும் திருவான்மியூா் கடற்கரைகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனா். ஆனால், கடற்கரையில் உள்ள கடைகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்தநிலையில் நெகிழி இல்லா கடற்கரைப் பகுதிகளாக பராமரிக்கும் வகையில் ஆக.5-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் மெரீனா, பெசன்ட் நகா் மற்றும் திருவான்மியூா் கடற்கரை பகுதிகளில் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை அமல்படுத்த சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலா்கள் தலைமையில் காலை, மாலை என இரு வேளைகளில் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதிகப்பட்ச அபராதமும் விதிக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதன்படி மெரீனா கடற்கரையில் வெள்ளிக்கிழமை காலை 68 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்திய 18 கடை உரிமையாளா்களிடமிருந்து ரூ.1,800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் கடந்த ஜூலை 27-ஆம் தேதி முதல் ஆக. 2-ஆம் தேதி வரையில் மாநகராட்சி சுகாதார அலுவலா்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 6,478 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 2,548 உரிமையாளா்களிடமிருந்து 1,861 கிலோ தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.9 லட்சத்து 17,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.