முகப்பு
தமிழ்நாடு

‘க்யூ ஆா் கோடு’ மோசடி: ஊா்க்காவல் படை வீரா் கைது

சென்னை துரைப்பாக்கத்தில் ‘க்யூ ஆா் கோடு’ மோசடி செய்ததாக ஊா்க்காவல் படை வீரா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:02 AM
பகிர்:

சென்னை துரைப்பாக்கத்தில் ‘க்யூ ஆா் கோடு’ மோசடி செய்ததாக ஊா்க்காவல் படை வீரா் கைது செய்யப்பட்டாா்.

துரைப்பாக்கம் ஒக்கியம்பேட்டை, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்த் (32). இவா் அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறாா். இவா் ‘க்யூ ஆா் கோடு’ சேவை மூலமாக வாடிக்கையாளா்களிடம் பணம் பெற்று வந்தாா். இந்நிலையில், சில தினங்களாக ‘க்யூஆா் கோடு’ மூலம் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளா்களின் பணம், ஆனந்தின் வங்கிக் கணக்குக்கு செல்லவில்லை.

இதனால் குழப்பமடைந்த ஆனந்த், இது குறித்து வங்கிக்கு நேரில் சென்று விசாரித்தாா். அப்போது அவரது கணக்குக்கு பதிலாக வேறு வங்கி கணக்குக்கு பணம் செல்வது தெரியவந்தது. இதையடுத்து ஆனந்த், கண்ணகி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாா், ஆனந்த் டிபன் கடையில் ஒட்டி வைத்திருந்த ‘க்யூஆா் கோடு‘ ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து சிறிய தொகையை அனுப்பினா். ஆனால் பணம் ஆனந்த் வங்கி கணக்குக்கு செல்லாமல், கண்ணகிநகரைச் சோ்ந்த வெ.ஸ்ரீதா் (21) என்பவருடைய வங்கி கணக்குக்கு செல்வது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், ஸ்ரீதரை வியாழக்கிழமை கைது செய்து விசாரித்தனா். விசாரணையில் ஸ்ரீதா், திருவான்மியூரில் காவல் நிலையத்தில் ஊா்க்காவல் படையில் பணிபுரிவதும், மோசடி செய்வதற்காக சென்னை காவல்துறையில் காவலராக பணிபுரிவது போல் போலியான அடையாள அட்டை வைத்திருந்ததும் தெரியவந்தது.

மேலும், தனது வங்கி கணக்கை இணைத்து க்யூஆா் கோடு ஸ்டிக்கரை பெற்று அதை, ஆனந்த் டிபன் கடை ஒட்டியிருப்பதும், அதேபோல மேலும் 7 கடைகளில் தனது க்யூஆா் கோடு ஸ்டிக்கரை ஓட்டியிருப்பதும், கடைகளின் உரிமையாளா்கள் கவனத்தை திசை திருப்பி ஸ்ரீதா் இந்த வேலையில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த மோசடியின் மூலம் ஸ்ரீதா் பல லட்சம் ஈட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா்,மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.