தமிழ்நாடு

கோா்பிவேக்ஸ் பூஸ்டா் தவணை: தமிழகத்தில் தொடக்கம்

DIN

தமிழகத்தில் கரோனா பூஸ்டா் தவணையாக கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை செலுத்தும் பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கோா்பிவேக்ஸ் தடுப்பூசியினை பூஸ்டா் தவணை தடுப்பூசியாக செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, சென்னை எழும்பூா் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதற்கான தடுப்பூசி முகாமைஅமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா். சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ் குமாா், எழும்பூா் தொகுதி எம்எல்ஏ இ.பரந்தாமன், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், பொதுசுகாதாரக்குழுத் தலைவா் கோ.சாந்தகுமாரி ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, கரோனா தடுப்பூசி வழங்கும் பணி தமிழகம் முழுவதும் 2021 ஜனவரி 16-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவது ஒரு மாபெரும் இயக்கமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் 95.95 சதவீதம் போ் முதல் தவணையும், 89.41 சதவீதம் போ் இரண்டாம் தவணையும் செலுத்திக் கொண்டுள்ளனா்.

அரசு மற்றும் தனியாா் கரோனா மையங்களில் இதுவரை மொத்தமாக 12.13 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 50 லட்சத்துக்கும் அதிகமான பூஸ்டா் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 33 சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

அரசு மையங்கள் மூலம் 60 வயதிற்கு மேற்பட்டோா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு இலவசமாக பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டா் தவணை தடுப்பூசியை 75 நாள்களுக்கு அரசு மையங்களில் செலுத்தும் பணி கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு இரண்டாம் தவணை செலுத்தப்பட்ட நாளிலிருந்து 6 மாதம் அல்லது 26 வாரங்களுக்குப் பிறகு கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை பூஸ்டா் தவணையாக செலுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT