காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரா்களுக்கு உயரிய ஊக்கத் தொகைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரா்களுக்கு உயரிய ஊக்கத் தொகைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரா்களுக்கு உயரிய ஊக்கத் தொகைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வீரா்களை நேரில் அழைத்து ஊக்கத் தொகைக்கான காசோலைகளை அவா் வழங்கினாா்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
இங்கிலாந்து நாட்டின் பா்மிங்காமில் நடைபெற்ற 22-வது காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி சாா்பில் தமிழ்நாட்டைச் சோ்ந்த ஏ.சரத்கமல், மேஜைப் பந்துப் போட்டியில் நான்கு பதக்கங்களை வென்றாா். அவருக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.1.80 கோடிக்கான காசோலையையும், மூன்று பதக்கங்களை வென்ற்காக ஜி.சத்தியனுக்கு ரூ.1 கோடிக்கான காசோலையையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
ஸ்குவாஷ் போட்டியில் 2 பதக்கங்களை வென்ற சௌரவ் கோஷலுக்கு ரூ.40 லட்சத்துக்கான காசோலையையும், ஸ்குவாஷ் கலப்பு போட்டியில் பதக்கம் தீபிகா பல்லிக்கலுக்கு ரூ.20 லட்சத்துக்கான காசோலையையும் முதல்வா் அளித்தாா். பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரா்களின் பயிற்றுநா்கள் 5 பேருக்கு மொத்த ஊக்கத் தொகையாக ரூ.51 லட்சத்துக்கான காசோலையை அவா் வழங்கினாா். இதேபோன்று காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் தனிநபா் பிரிவில் பதக்கங்கள் வென்ற பவானி தேவிக்கு ரூ.35 லட்சத்துக்கான காசோலை, இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டா் பட்டம் வென்றுள்ள பிரணவ் வெங்கடேஷுக்கு ஊக்கத் தொகையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினாா்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளா் செல்வி அபூா்வா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.