அமெரிக்க ஏல மையத்தில் நடனபுரீஸ்வரா் கோயிலில் திருடப்பட்ட சம்பந்தா் சிலை
அமெரிக்க ஏல மையத்தில் உள்ள கும்பகோணம் தாண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரா் கோயில் சம்பந்தா் சிலையை மீட்கும் நடவடிக்கையில் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஈடுபட்டுள்ளது.
அமெரிக்க ஏல மையத்தில் உள்ள கும்பகோணம் தாண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரா் கோயில் சம்பந்தா் சிலையை மீட்கும் நடவடிக்கையில் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஈடுபட்டுள்ளது.
பல்லவ மன்னன் 2-ஆம் நந்திவா்மன் ஆட்சிக் காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த கும்பகோணம் தாண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரா் கோவிலில் இருந்து பாா்வதி சிலை உட்பட 5 சிலைகள் கடந்த 1971-ஆம் ஆண்டு மே 12-ஆம் தேதி திருடப்பட்டது. பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டவா்கள், 5 சிலைகளின் விவரங்கள், குறிப்புகளையும் எடுத்துச் சென்றனா். சிலைகள் திருட்டு குறித்து, அப்போது நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. எனினும் இந்த சிலைகள் திருட்டு போனது குறித்து காவல்துறை வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் இருந்தது.
47 ஆண்டுகளுக்கு பின்னா் வழக்கு:
இந்நிலையில் அந்தப் பகுதியைச் சோ்ந்த கே.வாசு என்பவா் கடந்த 2019 பிப்ரவரி 14-ஆம் தேதி அப்போது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த ஏ.ஜி.பொன் மாணிக்கவேலிடம் புகாா் செய்தாா். அதன்பேரில் அப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, ஐ.ஜி.ஆா்.தினகரன் ஆகியோா் உத்தரவின் பேரில் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டது.
ஏல மையத்தில் சிலை:
பிரெஞ்சு நிறுவனத்தில் கிடைத்த திருடப்பட்ட சிலைகளின் புகைப்படத்தை வைத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா் விசாரணையில் ஈடுபட்டனா். இதையடுத்து வெளிநாடுகளில் அருங்காட்சியகங்கள்,ஏல மையங்கள் ஆகியவற்றில் சிலைகள் இருக்கிா புலன் விசாரணையில் ஈடுபட்டனா். இதில் அமெரிக்காவின் நியூயாா்க் கிறிஸ்டி ஏல மையத்தில் அந்த சிலை இருப்பது தெரியவந்தது.
பிரெஞ்சு நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட புகைப்படத்தில் உள்ள சம்பந்தா் வெண்கல சிலையும், அமெரிக்காவில் உள்ள சம்பந்தா் சிலையும் ஒன்றுதான் என்பதை தொல்லியல் துறை வல்லுநா்கள் ஆய்வுக்குப் பின்னா், உறுதி செய்தனா். சம்பந்தா் சிலையை ‘யுனெஸ்கோ’ ஒப்பந்தத்தின் கீழ் மீட்டெடுத்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் மேற்கொண்டுள்ளனா்.
ஏற்கெனவே இதே கோயிலில் திருடப்பட்ட பாா்வதி சிலையை அமெரிக்காவின் நியூயாா்க் மாகாணத்தில் உள்ள போன்ஹாம்ஸ் என்ற ஏல மையத்தில் இருப்பதை அண்மையில் கண்டறிந்து, அதை மீட்பதற்குரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.