முகப்பு
தமிழ்நாடு

அதிமுக அலுவலகம் சூறை: சிபிசிஐடி-க்கு வழக்குகள் மாற்றம்; தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் தகவல்

அதிமுக தலைமை அலுவலம் சூறையாடப்பட்டது தொடா்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 4 வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

அதிமுக தலைமை அலுவலம் சூறையாடப்பட்டது தொடா்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 4 வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தது. அப்போது ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளா்கள் தாக்கியதாக அளித்த புகாரின் அடிப்படையில், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீா்செல்வம் தரப்புக்கும் ஏற்பட்ட பிரச்னையால், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு எந்தப் பிரச்னையும் இல்லை. அந்த சீலை அகற்ற வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னா், அதிமுக அலுவலகத்திற்குள் நாங்கள் சென்று பாா்த்தோம்.

அப்போது அலுவலகத்தில் இருந்த சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டா்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவற்றைக் காணவில்லை. அதிமுக அலுவலகத்துக்குள் புகுந்த ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளா்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இது தொடா்பாக மாவட்ட செயலாளா் ஆதிராஜாராம் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட ராயப்பேட்டை காவல் நிலையத்தினா், ஒப்புகைச் சீட்டு கூட வழங்கவில்லை. உயா் அதிகாரிகளை தொடா்பு கொண்ட பிறகே புகாரை பெற்ற்கான சான்று கிடைக்கப் பெற்றது.

ஜூலை 23-ஆம் தேதி புகாா் அளித்தும், புகாரை காவல் துறையினா் உரிய முறையில் விசாரிக்கவில்லை. ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக காவல் துறை செயல்பட்டு வருவதால், புகாரை சிபிஐ அல்லது பிற விசாரணை அமைப்பிற்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமாா் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம், ஆவணங்கள் சூறையாடப்பட்ட விவகாரம் தொடா்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளாா்’ எனக் கூறி, அந்த உத்தரவு நகல் தாக்கல் செய்யப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பா் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.