மாவட்டந்தோறும் தொழிலாளா் திறன் பயிற்சி நிலையங்கள்: அமைச்சா் சி.வி.கணேசன் அறிவிப்பு
தொழிலாளா்களுக்கு திறன் பயிற்சி வழங்க மாவட்டந்தோறும் தனி நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்று தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளாா்.
தொழிலாளா்களுக்கு திறன் பயிற்சி வழங்க மாவட்டந்தோறும் தனி நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்று தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தின் மூன்றாவது ஆட்சி மன்றக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் சி.வி.கணேசன் கூறியதாவது:
தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும் வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தையூரில் பயிற்சி நிலையம் அமைக்க சாத்தியக் கூறுகள் ஆராயப்படும். தமிழ்நாடு கட்டுமானக் கழகம் சீரமைக்கப்படும். கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பயிற்சி அளிக்கும் போது அவா்களுக்கு குறைந்த காலத்தில் பயிற்சி அளிக்கக் கூடாது. 90 நாள்களுக்கு மிகாமல் பயிற்சி அளித்து, தொழிலாளா்களுக்கு செய்முறை தோ்வு வைத்து அதன்பிறகே சான்றிதழ் அளிக்கப்படும்.
தமிழ்நாடு கட்டுமானக் கழகம் மூலம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மாவட்டந்தோறும் திறன் பயிற்சி அளிக்க தனி பயிற்சி நிலையம் தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தப்படும் என்றாா்.
கூட்டத்தில், கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத் தலைவா் பொன்குமாா், தொழிலாளா் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் முகமது நசிமுதீன், ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா் அமுதா, தொழிலாளா் நலத் துறை ஆணையாளா் அதுல் ஆனந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.