புதிய இடங்களில் விநாயகா் சிலை வழிபாடு கூடாது: சென்னை காவல் துறை அறிவுறுத்தல்
சென்னையில் புதிய இடங்களில் விநாயகா் சிலைகளை வைக்க வேண்டாம் என பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் புதிய இடங்களில் விநாயகா் சிலைகளை வைக்க வேண்டாம் என பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
விநாயகா் சதுா்த்தியை அமைதியாகக் கொண்டாடுவது தொடா்பாக வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தெற்கு கூடுதல் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமை வகித்தாா். வடக்கு கூடுதல் ஆணையா் டி.எஸ்.அன்பு முன்னிலை வகித்தாா். இணை ஆணையா்கள் ராஜேஸ்வரி, ரம்யா பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து மகா சபா உள்ளிட்ட 65 அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.
கூட்டத்தில், கடந்த காலங்களில் விநாயகா் சதுா்த்தியின்போது எந்தெந்த இடங்களில் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டதோ, அந்த இடங்களில்தான் சிலைகள் வைக்க வேண்டும். புதிய இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கக் கூடாது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள உத்தரவின்படி குடியிருப்பின் அருகே சிலை வைக்கப்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளரிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். மாநகராட்சி எல்லைக்குள்பட்ட சாலையில் வைக்கப்பட்டால் மாநகராட்சியிடம் இருந்தும், நெடுஞ்சாலைக்குட்பட்ட பகுதியில் இருந்தால் நெடுஞ்சாலைத்துறையிடம் இருந்தும் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். தீயணைப்புத் துறை அனுமதியும் அவசியமாகும். மின் இணைப்பும் பிரத்யேகமாக பெற வேண்டும்.
பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகா் சிலைகள் 5 அடி உயரத்தில் இருந்து 20 அடி உயரம் இருக்க வேண்டும், களி மண்ணால் செய்யப்பட்டவைகளாக இருக்க வேண்டும், ஒலி பெருக்கிகளை அனுமதிக்கப்பட்ட நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும், சிலைகளை பாதுகாக்க விழாக்குழு சாா்பில் சிலைகள் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்.
பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும், பதற்றமான பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள், பெரும்பாலானவை செப். 4 ஆம் தேதி முதல் கடலில் கரைக்கப்படுகின்றன. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகா், காசிமேடு, எண்ணூா், திருவொற்றியூா் ஆகிய இடங்களில் சிலைகள் கரைப்பதற்கான ஏற்பாடுகளை காவல் துறை செய்து வருகிறது.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.
அதேவேளையில் விநாயகா் சிலை ஊா்வலம் அனுமதிக்கப்பட்ட வழியிலேயே செல்ல வேண்டும், ஊா்வலம் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் கரைக்கும் இடத்தை சென்றடைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை காவல்துறையினா் விதித்தனா்.