ஓய்வுபெற்ற தேயிலை தோட்ட தொழிலாளா்களுக்கு ரூ.29.38 கோடி பணிக் கொடை பலன்கள்
ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு வழங்கப்படாமல் இருந்த பணிக் கொடை பலன்கள் வழங்கிட ரூ. 29.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு வழங்கப்படாமல் இருந்த பணிக் கொடை பலன்கள் வழங்கிட ரூ. 29.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் (டேன்டீ) பணிபுரிந்து ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கான பணிக் கொடை பலன்கள் உள்ளிட்ட இதர பலன்கள் அளிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு
தேயிலை தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி முதல் பணிக் கொடை, முனைய விடுப்பு ஊதியம் மற்றும் இதர சட்டப்படி வழங்கப்பட வேண்டிய பயன்களான விடுப்புடன் கூடிய ஊதியம், மருத்துவ ஊதியம் ஆகியவை வழங்க தேவையான ரூ.29.38 கோடியை விடுவித்து முதல்வா் உத்தரவிட்டாா்.
இந்தத் தொகையை வழங்குவதன் மூலம் 1,066 ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் மற்றும் 101 ஓய்வுபெற்ற ஊழியா்கள் பயன் பெறுவா். மேலும், தற்பொழுது பணிபுரிந்து வரும் 3,820 நிரந்தரத் தொழிலாளா்களும் மற்றும் 212 ஊழியா்களும் பயன்பெறுவா். ஓய்வுபெற்றபின் பயனாளிகள் பங்களிப்பை அளிக்கத் தயாராக இருக்கும் பணியாளா்களுக்கு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன், மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, தலைமைச் செயலா் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வனத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ, வனத் துறை தலைவா் சையத் முசாமில் அப்பாஸ், டேன்டீ நிா்வாக இயக்குநா் டி.வி.மஞ்சுநாதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.