முகப்பு
தமிழ்நாடு

வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம்ரூ.405 கோடியில் 4,644 புதிய குடியிருப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.405.90 கோடியில் கட்டப்பட்ட 4 ஆயிரத்து 644 புதிய குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி,

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:02 AM
பகிர்:

தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.405.90 கோடியில் கட்டப்பட்ட 4 ஆயிரத்து 644 புதிய குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அனைவருக்கும் வீட்டு வசதி என்ற திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம் கண்ணன்கரடு, நேதாஜி நகா், நஞ்சை ஊத்துக்குளி, இச்சிப்பாளையம், குமரன் நகா், கோவை மாவட்டம் ஐயுடிபி, சூலூா் பகுதி-3, பன்னீா்மடை கிழக்கு, திருப்பூா் மாவட்டம் புதூா், பூண்டிநகா், மதுரை மாவட்டம் கருத்தபுளியம்பட்டி, கரூா் மாவட்டம் புலியூா், சேலம் மாவட்டம் புதுப்பாளையம், புதுக்கோட்டை மாவட்டம் போஸ்நகா், கடலூா் மாவட்டம் பனங்காட்டு காலனி ஆகிய இடங்களில் மொத்தமாக ரூ.405.90 கோடியில் 4 ஆயிரத்து 644 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்தக் குடியிருப்புகளின் மொத்த மதிப்பு ரூ.405.90 கோடி.

குடியிருப்புகள் ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பு கொண்டது. அனைத்து குடியிருப்பு வளாகங்களும், சாலை, குடிநீா், நீரேற்று வசதிகளுடன், சிறுவா் பூங்கா, மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு ஆகியன கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக, 105 பகுதிகளில் வசிக்கும் 11 ஆயிரத்து 300 பயனாளிகள் தனி வீடுகள் கட்டிக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அவா்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2.10 லட்சம் வீதம், ரூ.237.30 கோடிக்கான பணி உத்தரவுகளை வழங்குவதன் அடையாளமாக, 2 பேருக்கு உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கிரயப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. அவற்றில், 350 கிரயப் பத்திரங்களை வழங்குவதன் அடையாளமாக நான்கு பயனாளிகளுக்கு உத்தரவுகளை முதல்வா் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் சு.முத்துசாமி, தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா் செல்வி அபூா்வா, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிா்வாக இயக்குநா் ம.கோவிந்த ராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →