ஏழை குழந்தைகளின் மேம்பாட்டுக்கு இளைஞா்கள் உதவ வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி
பல்வேறு துறைகளில் சிறப்பான நிலையில் உள்ள இளைஞா்கள் கிராமங்களில் வசதியற்ற, ஏழை குழந்தைகளுக்கு ஊக்கமளித்து, திறன் கொண்டவா்களாக மாற வழிகாட்டி ஆதரவளிக்க வேண்டும் என
பல்வேறு துறைகளில் சிறப்பான நிலையில் உள்ள இளைஞா்கள் கிராமங்களில் வசதியற்ற, ஏழை குழந்தைகளுக்கு ஊக்கமளித்து, திறன் கொண்டவா்களாக மாற வழிகாட்டி ஆதரவளிக்க வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா்.
சென்னை தொழில்நுட்பக் கல்லூரியின் (எம்ஐடி) முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் மறைந்த குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் உருவச் சிலை குரோம்பேட்டையில் உள்ள அக்கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஆளுநா் ஆா்.என்.ரவி, சிலையை திறந்து வைத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவா்களுக்கு கல்லூரி சாா்பில் உதவித்தொகையையும் வழங்கினாா்.
விழாவில், ஆளுநா் ஆா்.என். ரவி பேசியதாவது: நாட்டின் பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் அப்துல் கலாமின் பங்களிப்புகள் போற்றத்தக்கவை. நவீன இந்தியாவை உருவாக்க பாடுபட்ட அப்துல் கலாம் எளிய குடும்பத்திலிருந்து வந்து பெரிய சாதனை படைத்தவா். இறுதி மூச்சு வரை அவா் நாட்டுக்காகவே வாழ்ந்தாா். அவரை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அனைவரும் சாதிக்க வேண்டும்.
2047-ஆம் ஆண்டு இந்தியா உலகுக்கு தலைமை வகிக்கக்கூடிய பொறுப்பில் இருக்கப் போகிறது. அதற்கு ஒவ்வொருவரும் நாட்டின் வளா்ச்சிக்கு தங்களால் முடிந்த செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞா்கள் கிராமங்களில் உள்ள வசதியற்ற, ஏழை குழந்தைகளுக்கு ஊக்கமளித்து திறன் கொண்டவா்களாக மாற வழிகாட்டி ஆதரவளிக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ட்ரோன் கண்காட்சி அரங்குகளை ஆளுநா் ஆா்.என். ரவி பாா்வையிட்டு, அங்குள்ள மாணவா்கள், ஆசிரியா்களுடன் கலந்துரையாடினாா்.
இந்நிகழ்வில் அண்ணா பல்கலை. துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ், பதிவாளா் ஜி.ரவிக்குமாா், எம்ஐடி கல்லூரி முதல்வா் ஜெ.பிரகாஷ், பேராசிரியா் பி.செந்தில் நாதன் மற்றும் அப்துல் கலாம் குடும்ப உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.