தமிழ்நாடு

சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்தால் ஒரு மாதத்துக்குள் வழங்க முதல்வர் உத்தரவு

DIN

சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்தால் ஒரு மாதத்துக்குள் வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (26.12.2022) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, உள்துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளின் முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் மற்றும் பொதுவான செயலாக்கம் குறித்து முதலமைச்சரின் தகவல் பலகை (Dash board) தரவுகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்றவை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்ட  முதல்வர் அவர்கள், நிலுவையிலுள்ள சான்றிதழ்களை அடுத்த ஒருமாத காலத்திற்குள், தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என்றும், அவற்றின் விவரங்கள் குறித்து தகவல் பலகையிலும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 

தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பட்டா மாறுதலில் தாமதங்கள் காணப்படுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அலுவலர்களுக்கு இதுகுறித்து தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி இந்த சேவை வழங்கப்பட வேண்டும் என்று  முதல்வர் அவர்கள் அறிவுறுத்தினார்.

அதேபோன்று, நகராட்சி நிர்வாகத் துறையின் பணிகளும் தகவல் பலகை தரவுகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, வேலூர், தருமபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும்  முதல்வர் அறிவுறுத்தினார். மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மழைநீர் வடிகால், பாதாள சாக்கடைத் திட்டங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள், நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

போக்குவரத்துத் துறையில் போதுமான எண்ணிக்கையில் பேருந்து சேவைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு குறையாமல் போதுமான அளவு இயக்கப்பட வேண்டும் என்றும், குறைவாக பேருந்து சேவைகள் இயக்கப்பட்டால் அதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை உடனடியாக களையவேண்டும் என்றும், பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும்  முதல்வர் அவர்கள் அறிவுறுத்தினார்.

அடுத்தபடியாக, மாநிலத்தில் பல்வேறு குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக ஆய்வு செய்யப்பட்டது. நிலுவை வழக்குகள் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும், அதேநேரத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் நவீன முறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்  முதல்வர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகர் P.W.C. டேவிதார், இ.ஆ.ப., (ஓய்வு) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸை கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

பரமத்தி மலா் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

திருச்செங்கோடு எஸ்.பி.கே. மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுத்தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சாதனை

10-ஆம் வகுப்பு தோ்வு: நாமக்கல் குறிஞ்சிப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT