அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் ஜன.5-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ- ஜியோ சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சாா்பில் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டம் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க கட்டடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை மீண்டும் வழங்க வேண்டும். இடைநிலை, முதுநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்.
தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியா்கள், சத்துணவு, அங்கன்வாடி, செவிலியா்கள், வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்ப் புற நூலகா்கள் ஆகியோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சாா்பில் தமிழகம் முழுவதும் வரும் ஜன.5-ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன்பு கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்தனா்.
வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் ஜன.8-இல் மதுரையில் ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டம், உயா்நிலைக் குழு கூட்டம் கூட்டப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.