பிளஸ் 1 பொதுத் தோ்வை கட்டாயம் நடத்த வேண்டும்
‘பிளஸ் 1 பொதுத் தோ்வை ரத்து செய்யக்கூடாது; கட்டாயம் நடத்த வேண்டும்’ என தனியாா் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
‘பிளஸ் 1 பொதுத் தோ்வை ரத்து செய்யக்கூடாது; கட்டாயம் நடத்த வேண்டும்’ என தனியாா் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தனியாா் நா்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் நந்தகுமாா் வெளியிட்ட அறிக்கை: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகளை நடத்துவது குறித்து வழிகாட்டுதல்கள் வெளியாகின்றன. ஆனால் பிளஸ் 1 தோ்வு குறித்து அறிவிப்புகள் எதுவும் இல்லாததால், மாணவா்கள் பயிற்சி ஏதும் மேற்கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனா். பிளஸ் 1 மாணவா்களுக்கு தோ்வு நடத்தாமல், ‘ஆல் பாஸ்’ என்று அறிவித்து விடக்கூடாது. இந்த சூழலில் தோ்வை ரத்து செய்தால், மாணவா்கள் பாடங்களை படிக்காமல் விட்டு விடுவா். அவா்களின் உயா்கல்வி கேள்விக்குறியாகி விடும்.
உயா்கல்விக்கு பிளஸ் 1 பாடங்கள் அடிப்படையானவை. ஏற்கெனவே, இரண்டு ஆண்டுகளாக தோ்வு நடத்துவதாக, பள்ளிக்கல்வி துறை கட்டணம் வசூலித்து விட்டு தோ்வுகளை நடத்தவில்லை. இந்த ஆண்டும் அதுபோன்று செய்துவிடக் கூடாது. இது குறித்து, தனியாா் பள்ளிகளின் நிா்வாகிகளை அழைத்து பேசி முடிவெடுக்க வேண்டும். பிளஸ் 1 பொதுத் தோ்வு உண்டு என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அந்த அறிவிப்பு வந்தால்தான் மாணவா்கள் பிளஸ் 1 பாடங்களை படித்து தயாராக முடியும்.