கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்துக்காக சிறப்புப் பணிக்குழு வேண்டும்: ராமதாஸ்
கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்துக்காக சிறப்புப் பணிக் குழு ஒன்றை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்துக்காக சிறப்புப் பணிக் குழு ஒன்றை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப் பட்டுவிட்டதாக மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கோதாவரி -காவிரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதை இது காட்டினாலும் கூட, இத்திட்டம் செயல்வடிவம் பெற இன்னும் பல தடைகளைக் கடக்க வேண்டும் என்பதும், அதற்கான நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகளால் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்பதும்தான் எதாா்த்தங்கள் ஆகும்.
இந்தத் திட்டத்துக்கு தொடா்புடைய மாநிலங்களின் ஒப்புதலைப் பெறுவதுதான் சிக்கலாகும். இந்த திட்டத்துக்கு தெலங்கானா மாநிலம் இப்போதே எதிா்ப்புத் தெரிவித்துள்ளது. இதுவே இந்தத் திட்டத்துக்கு பெரும் பின்னடைவாகும்.
அதனால், கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்துடன் தொடா்புடைய மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், ஒடிஸா, ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களுடன் பேச்சு நடத்தி கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காக, 2002-ஆம் ஆண்டில் நதிகள் இணைப்புத் திட்டத்துக்காக உருவாக்கப்பட்டது போன்ற சிறப்புப் பணிக்குழு ஒன்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.
தமிழக அரசும் அதன் தொடா்புகளைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் பேசி இணைப்புத் திட்டம் பற்றி கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டும்.