முகப்பு
தமிழ்நாடு

கம்பத்தில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

தேனி மாவட்டம் கம்பத்தில் சனிக்கிழமை காலை, மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியானார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
கம்பத்தில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
பகிர்:


கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் சனிக்கிழமை காலை, மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியானார்.

தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன், இவர் பழைய பேருந்து நிலையம் அருகே மெத்தை கடை வைத்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர், இரண்டாவது மகன் சிவப்பிரகாசம் (21), இவர்  உத்தமபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை அறிவியல் (இயற்பியல் ) படித்து வந்தார்.

இந்நிலையில் ஐயப்பன் மேற்பார்வையில் சிவனடியார் மடம் உள்ளது,  இங்கு தினமும் அன்னதானம் நடைபெறும்.  இந்த மடத்தின் ஆறாவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது, ஆண்டு விழாவிற்காக பராமரிப்பு வேலைகளை மடத்தைச்சேர்ந்த தன்னார்வலர்கள் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது இரண்டாவது மாடியில் கொடி கம்பம் ஏற்ற சிவப்பிரகாசம் கீழே இருந்த மின்சார இரும்பு கம்பியை மாடியில் பால்கனி வழியாக மேலே இழுத்தார்.

அப்போது மரத்தின் மேல்பகுதியில் உயர் அழுத்த மின்சார வயர் சென்றது, சிவப்பிரகாசம் இழுத்த இரும்பு கம்பி மின்சார வயர்  மீது பட்டது. இதில் மின்சாரம் தாக்கி சிவப்பிரகாசம் தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்தார். அலறல் சத்தத்தை கேட்ட உடன் வேலை செய்தவர்கள் மேலே சென்று பார்த்தபோது சிவப்பிரகாசம் மயங்கிய நிலையில்  கிடந்தார்.

உடனே அவரை கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக கம்பம் வடக்கு காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிவு செய்து, உடற்கூறு பரிசோதனைக்கு கம்பம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து மேல் விசாரணை  செய்து வருகின்றனர்.

தினமும் அன்னதானம் நடைபெறும் சிவனடியார் மடத்தில் அதன் நிர்வாகியின் மகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது, அந்த பகுதியில் உள்ள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
 

முழு கட்டுரையைப் படிக்க →