உதகைக்கு வந்தார்களா, வேற்றுலகவாசிகள்? (விடியோ இணைப்பு)
உதகை தொட்டபெட்டா மலைச்சிகரப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை விழித்திருந்தவர்களுக்குக் கண்கொள்ளா காட்சியொன்று தென்பட்டது.
வானில் எத்தனையோ ஆச்சரியங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன, நமக்குத் தெரிந்தும் தெரியாமலும்.
உதகையிலும் தொட்டபெட்டா மலைச்சிகரப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை விழித்திருந்தவர்களுக்குக் கண்கொள்ளா காட்சியொன்று தென்பட்டது.
வானில் பிரகாசமான வெளிச்சத்துடன் ஒரு பொருள் பறந்து செல்வதைப் பலரும் பார்த்திருக்கின்றனர். இந்த அரிய நிகழ்வைச் சிலர் தங்கள் செல்லிடப் பேசியில் படமும் பிடித்துள்ளனர்.
வானில் மிகுந்த ஒளியுடன் அந்த மர்மப் பொருள் நகர்ந்து செல்கிறது. இது விண்கல்லாக இருக்கலாம், அல்லது பறக்கும் தட்டாக இருக்கலாம் என்றெல்லாம் கருதப்படுகிறது.
இதையும் படிக்க | காதலர் தின சிறப்புப் பக்கம்
விண்வெளியில் வழக்கமான சுற்றுப்பாதையிலிருந்து தவறிவிடும் சில விண்கற்கள் இவ்வாறு பறந்துகொண்டிருக்கும்போதே எரிந்தழிந்து இல்லாமல் போய்விடும்.
இல்லை, இல்லை, அவ்வப்போது வேற்றுலகவாசிகள் பறக்கும் தட்டுகளில் பூமிக்கு வந்து செல்வார்கள். அப்படித்தான் இப்போதும் வந்து சென்றிருக்கிறார்கள் என்று கூறுவோரும் இருக்கின்றனர்.
எப்படியோ, என்னவென்று அடையாளம் காண முடியாத இந்த வான்வெளிப் பரவசத்தைக் கண்டவர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர்.
இதனிடையே, இதேபோல திண்டுக்கல், திருவண்ணாமலை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் தென்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நேற்று அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. 'வானில் தோன்றிய பொருள், அந்த செயற்கைக்கோளாக இருக்கலாமோ என்று ம் சிலர் கருதுகின்றனர். ஆனால், ஆந்திரத்தில் இருந்து ஏவப்பட்ட செயற்கைக்கோள், உதகை, திருவண்ணாமலை, திண்டுக்கல்லில் தெரிய வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத் தக்கது.