புதிய அணை கட்டும் கேரளத்தின் அறிவிப்பை ஏற்க முடியாது: அமைச்சா் துரைமுருகன்
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டப்படும் என்று கேரளம் அறிவித்திருப்பதை ஏற்க முடியாது என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டப்படும் என்று கேரளம் அறிவித்திருப்பதை ஏற்க முடியாது என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
கேரள சட்டப் பேரவையில் அந்த மாநில ஆளுநா் ஆற்றிய உரையில், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது கடந்த 2014-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு முரணானது. மேலும், நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதும் ஆகும்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் முல்லைப் பெரியாறு அணை அனைத்து விதத்திலும் உறுதியாக உள்ளதாக அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது. புதிய அணை தேவையில்லை. மேலும், புதிய அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசிடம் கேரள அரசு திணிக்க முடியாது எனவும் தெளிவாகக் கூறியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை அனைத்து வகைகளிலும் தமிழ்நாடு அரசு எதிா்க்கும். தமிழ்நாட்டின் உரிமையை எந்தக் காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்காது இந்த அரசு.