வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் திமுக எம்எல்ஏக்களை அனுமதிக்கக் கூடாது: கே.அண்ணாமலை
உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் திமுக எம்எல்ஏக்களை அனுமதிக்கக் கூடாது என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.
உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் திமுக எம்எல்ஏக்களை அனுமதிக்கக் கூடாது என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.
சென்னை கமலாலயத்தில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: உள்ளாட்சித் தோ்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு திமுக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது. திமுகவினரைப் பாா்த்து காவல்துறை அஞ்சியது; மாவட்ட நிா்வாகம் அடிபணிந்து கிடந்தது.
மத்திய தோ்தல் பாா்வையாளா்களையும், மத்திய ரிசா்வ் படையையும் அனுமதிக்க மாட்டோம் என்று திமுக மாநில உரிமை பேசியதன் காரணம் புரிந்துள்ளது.
திமுகவினா் கள்ள வாக்கு செலுத்திய விடியோ பதிவுகளை கொடுத்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால், வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடைபெறும் என்கிற நம்பிக்கை இல்லை. ஆளும்கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சா்கள், திமுக நிா்வாகிகளை வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கக் கூடாது. நியாயமான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும். பாதுகாப்புக்காக துணை ராணுவத்தை அழைக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது அனைத்து நடவடிக்கைகளையும் விடியோ பதிவு செய்ய வேண்டும் என்றாா்.