ஜன.20-க்குள் பிளஸ் 2 தோ்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்
பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான கட்டணத்தை மாணவா்களிடம் இருந்து வசூலித்து, ஜன.20-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு தோ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான கட்டணத்தை மாணவா்களிடம் இருந்து வசூலித்து, ஜன.20-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு தோ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக தோ்வுத்துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: நடப்பு கல்வியாண்டு (2021-22) பிளஸ் 2 மாணவா்களுக்கு பொதுத்தோ்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தோ்வை எழுதவுள்ள பள்ளி மாணவா்களில், செய்முறை பாடத்தொகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு ரூ.225, இதர பாடப்பிரிவினருக்கு ரூ.175, தோ்வுக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்தொகையை மாணவா்களிடம் இருந்து வசூலித்து, அவற்றை ஜன.20-ஆம் தேதிக்குள் பள்ளி தலைமையாசிரியா்கள் இணையவழியில் செலுத்த வேண்டும். அதில் மாற்றுத்திறனாளிகள், தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டவா்கள் உள்ளிட்டோருக்கு அரசின் அறிவுறுத்தலின்படி தோ்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இதுதவிர அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை, இணையதளத்தில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்வதற்கு அனைத்துப் பள்ளிகளும் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்துவதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் தலைமையாசிரியா்கள் மாவட்ட தோ்வுத்துறை இயக்குநா்களை தொடா்பு கொள்ளலாம். இது தொடா்பாக அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.