முகப்பு
தமிழ்நாடு

ஏற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தரையில் அமர்ந்து தர்னா: வாழப்பாடியில் பரபரப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஏற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
ஏற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தரையில் அமர்ந்து தர்னா: வாழப்பாடியில் பரபரப்பு
பகிர்:


 வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஏற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2017ல் கலையரங்கம் அமைக்க, ரூ. 13.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்திட்டப் பணிகள் இரண்டு ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், கடந்த செப்.29 ல் தமிழக முதல்வர் மு க.ஸ்டாலின், வருமுன் காப்போம் திட்ட துவக்க விழாவிற்கு வாழப்பாடி வருகை தந்த போது, கட்டுமான பணிகள் நிறைவு செய்யப்பட்டது. 

இதனையடுத்து, இந்த கலையரங்கத்திற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் கலையரங்கம் என பெயர் சூட்டப்பட்டு, திறப்பு விழா செய்து, கல்வெட்டு பெயர் பலகை வைக்கப்பட்டது.

இந்த கல்வெட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதமசிகாமணி, ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா, பனமரத்துப்பட்டி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவலிங்கம், ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளது.  

இந்நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது ஒதுக்கிய நிதியை பயன்படுத்தி கட்டப்பட்ட கலையரங்கத்திற்கு,  கலைஞர்  கலையரங்கம் என பெயர் சூட்டப்பட்டதை. கண்டித்தும், ஏற்கனவே 2020 தீர்மானம் நிறைவேற்றியபடி புரட்சித்தலைவி அம்மா கலையரங்கம் என பெயர் சூட்ட வலியுறுத்தியும், ஏற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா, கலையரங்கந்திற்கு முன்பாக   தரையில் அமர்ந்து  தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார். 

வாழப்பாடி ஒன்றிய அதிமுக செயலாளர் சதீஷ்குமார், நகர செயலாளர் சிவக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் எம்ஜிஆர் பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா கூறியதாவது,  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது, ஏற்காடு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவாக,  அம்மா  கலையரங்கம் அமைப்பதற்கு, எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.13.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தேன். இந்த கலையரங்கத்திற்கு புரட்சித்தலைவி அம்மா கலையரங்கம் என பெயர் சூட்ட வேண்டுமென 2020ல் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த கலையரங்கத்திற்கு கலைஞர்  பெயர் சூட்டப்பட்டுள்ளது.

எனவே, இந்த கல்வெட்டை அகற்றிவிட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்ட வேண்டும். நிதி ஒதுக்கீடு செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பெயர் குறித்து கல்வெட்டு நிறுவ வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார். 

மாவட்ட உயர் அதிகாரியிடம் கலந்தாலோசித்த பிறகு, முறையாக அனுமதி பெற்று பெயர் பலகை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →