முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 4,862 பேருக்கு கரோனா: 24 மணி நேரத்தில் 78% அதிகரித்த பாதிப்பு விகிதம்

தமிழகத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 4,862 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நாளைக் காட்டிலும் 78 சதவீதம் அதிகம் என்பது அதிா்ச்சிக்குரிய தகவலாக உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:02 AM
பகிர்:

தமிழகத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 4,862 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நாளைக் காட்டிலும் 78 சதவீதம் அதிகம் என்பது அதிா்ச்சிக்குரிய தகவலாக உள்ளது.

இதே நிலை தொடா்ந்தால் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்துவிடும் என அஞ்சப்படுகிறது. சென்னையைப் பொருத்தவரை மொத்த பாதிப்பில் 60 சதவீதம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக நகரில் உள்ள முக்கிய மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக பாதிப்பு இல்லாதவா்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்க மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மட்டுமல்லாது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், கோவை உள்பட பல மாவட்டங்களில் கரோனா தொற்று பரவல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

தற்போது பரவி வருவது ஒமைக்ரான் கரோனா வகை எனக் கருதப்படுவதால் மக்கள் அலட்சியத்துடன் இருந்தால் ஓரிரு வாரங்களிலேயே தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோருக்கு தொற்று பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, புதன்கிழமை மட்டும் சென்னையில் 2,481 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களில் இல்லாத புதிய உச்சம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 596 பேரும், கோவையில் 259 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மற்றொருபுறம் மேலும் 688 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு புதன்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 7,058-ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 16,577 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 9 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,814-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, ஒமைக்ரான் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த 240 பேரில் 90 சதவீதம் போ் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட 121 பேரில் 110 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.