சென்னையில் இன்று மட்டும் 25,964 சிறார்களுக்கு தடுப்பூசி
சென்னையில் இன்று மட்டும் 25,964 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 25,964 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல்வரால் சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சுமார் 2,55,000 நபர்கள் உள்ளனர். இவர்களில் இதுவரை சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக இன்று (07.01.2022) பள்ளிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களின் மூலம் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட 25,964 சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
07.01.2022 வரை 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட 99,090 சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் தொற்றும் தற்போது பரவி வருகிறது.
கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மட்டுமே சிறந்த வழிமுறையாக உள்ளது. கரோனா தடுப்பூசி இரண்டு தவணை தடுப்பூசி
எடுத்துக் கொண்ட நபர்களுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகே முழு அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் தீவிர சிகிச்சைகள் ஏதுமின்றி லேசான அறிகுறிகளுடன் உயிர் பாதுகாப்பு உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 9,48,598 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்தும் இன்னும்
செலுத்தாமல் உள்ளனர். நாளை நடைபெறும் கரோனா மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு செலுத்த 6,64,555 கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
எனவே நாளை மாநகராட்சியின் சார்பில் நடைபெற உள்ள கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திகொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் மற்றும் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், தொற்று பாதித்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இல்லங்களில் மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருக்கும்படியும், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் நபர்கள் தங்களுடைய பணி நேரத்தின்போது முககவசம் அணிந்து கொண்டு பணியில் ஈடுபடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உணவு விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் உணவு அருந்துவதை தவிர்த்து பார்சல் உணவுகளாக கொண்டு செல்லவும், கூட்டமாக அமர்ந்து உணவு அருந்துவதை தவிர்த்து அதிக இடைவெளியுடன் அமர்ந்து உணவருந்தவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.